மாவட்ட செய்திகள்

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது ஏன்? - பள்ளிக்கல்வித்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Why is there a decrease in the number of students in government schools? Madurai High Court directive in response to School Education

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது ஏன்? - பள்ளிக்கல்வித்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது ஏன்? - பள்ளிக்கல்வித்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது ஏன்? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை, 

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாடு முழுவதும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம் கடந்த 2010-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளால் கல்வியின் தரம் எந்த விதத்திலும் மேம்படவில்லை.

அரசுப்பள்ளிகளில் சேரும் குழந்தைகள், திடீரென தனியார் பள்ளிகளுக்கு மாற்றப் படுகின்றனர். எனவே கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் கட்டாயக்கல்வி சட்டத்தை சீராய்வு செய்ய வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிகளில் சேருவதற்கு மாற்றுச்சான்றிதழை கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால் அடுத்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்பட உள்ளதாகவும், 1,053 பள்ளிகளில் தலா 10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு அரசு பள்ளிகளின் தரம் குறைந்ததே முக்கிய காரணம்” என்றார்.

அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, “குறைவான மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகளை இணைக்கும் திட்டம் உள்ளது” என்றார்.

பின்னர், தனியார் பள்ளிகளுக்கு அதிக அளவில் அனுமதி வழங்குவது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது ஏன்? என்பது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை டிசம்பர் மாதம் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.