கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில்: பொதுமக்களுக்கு இடையூறாக ஊழியர்களின் வாகனங்கள் கலெக்டர் அருண் எச்சரிக்கை


கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில்: பொதுமக்களுக்கு இடையூறாக ஊழியர்களின் வாகனங்கள் கலெக்டர் அருண் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2019 5:40 AM IST (Updated: 8 Nov 2019 5:40 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஊழியர்களின் வாகனங்களை வேறு இடத்தில் நிறுத்தி வைக்குமாறு கலெக்டர் அருண் அறிவுறுத்தினார்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் கடந்த 3 நாட்களாக கொம்யூன் பஞ்சாயத்துகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த 5-ந் தேதி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து இருளஞ்சந்தை கிராமத்திலும், நேற்று முன்தினம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆண்டியார்பாளையம், மதகடிப்பட்டுபாளையம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திலும் ஆய்வு செய்தார்.

3-வது நாளாக நேற்று அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கலெக்டர் அருண் திடீர் ஆய்வு செய்தார். கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தின் வராண்டாவில் பிறப்பு-இறப்பு சான்றிதழ், திருமண பதிவு, வீட்டு வரி செலுத்தும் கவுண்ட்டர்கள் உள்ளன.

அந்த பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அங்கிருந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அலுவலகத்தின் பின்புறம் நிறுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், மேலாளர் ரவி மற்றும் பொறியாளர்களுடன் நீர்நிலைகள் மேம்பாடு குறித்து கலெக்டர் அருண் ஆலோசனை நடத்தினார். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் 62 குளங்கள் உள்ளன. இதில் 10 குளங்கள் கொம்யூன் சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குளங்களை சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் குளங்கள், கால்வாய்கள், கழிவுநீர் வாய்க்கால், சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும், டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை கண்டறிந்து, தண்ணீரை அகற்றவேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து பொதுமக்களிடம் பெறவேண்டும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏம்பலம் தனிக்குப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த வண்ணான் குளத்தை தனியார் நிறுவனம் சார்பில் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர், உதவி பொறியாளர் கருத்தையன், மேலாளர் குப்பன், இளநிலை பொறியாளர்கள் மாணிக்கசாமி, அகிலன், வருவாய் ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story