விராலிமலை அருகே சாலை சேதம்: அரசு மணல்குவாரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


விராலிமலை அருகே சாலை சேதம்: அரசு மணல்குவாரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2019 4:30 AM IST (Updated: 8 Nov 2019 8:20 PM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே சாலை சேதமடைவதாகக்கூறி அரசு மணல்குவாரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விராலிமலை, 

விராலிமலை தாலுகா மதயாணைப்பட்டியில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கிருந்து மணலை அள்ளி லாரிகள் மூலமாக வில்லாரோடை, ஆலங்குளம், முல்லையூர் வழியாக விராலிமலை சாலைக்கு சென்று பூமரம், ஆத்துப்பட்டியில் உள்ள அரசு மணல் கிடங்கில் சேமிக்கப்படுகிறது. பின்னர் மணல் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு மணல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பணியை பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல மதயாணைப்பட்டி அரசு மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வில்லாரோடை கிராமத்தின் வழியாக லாரிகள் சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த கிராம மக்கள், இந்த சாலை வழியாக தொடர்ந்து மணல் லாரிகள் செல்வதால் சாலை சேதமடைந்துவிட்டது.

இதனால் வில்லாரோடை வழியாக மணல் லாரிகள் செல்லக்கூடாது எனக்கூறி மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாலையை சீரமைத்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து வாலிபர்கள் லாரிகளை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story