அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புதிய ரக கரும்பினை பயிரிடுவதால் அதிக விளைச்சல் பெறலாம் - வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தகவல்
தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ரக கரும்பினை பயிரிடுவதால் குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் பெறலாம் என கரூரில், வேளாண்மைத்துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
கரூர்,
கரூர் மாவட்டம் புகளூரில் அமைந்துள்ள ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிறுவனத்தில் கரும்பு பயிரிடும் முறை குறித்தும், விவசாயிகளுக்கு பயன் படக்கூடிய வகையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்த அரசு முதன்மைச் செயலாளர், தமிழக அரசால் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோ-11015 என்ற வகையான கரும்பு பயிரிடப்பட்டுள்ள வயலையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வளர்மதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, புகளூர் சர்க்கரை ஆலையின் முதுநிலை பொதுமேலாளர் செந்தில் இனியன், இணை பொது மேலாளர்கள் ராஜேந்திரன், தங்கராஜ் முதுநிலை மேலாளர்கள் பிரபாகரன், காந்திமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பின்னர் வேளாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரும்பு விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசால் கடந்த ஆண்டு முதல் கோயம்புத்தூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் உதவியுடனும், பல்வேறு கரும்பு தயாரிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும் வகையில் கோ-11015 என்ற வகையான கரும்பு கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் 86032 என்ற ரக கரும்பு அதிக அளவில் விவசாயிகளால் பயிரிடப்படுகின்றது. இந்த ரக கரும்பின் மூலம் வரப்பெறும் சர்க்கரையின் அளவைக்காட்டிலும், 0.5 சதவீதம் கூடுதல் இனிப்புச்சுவையை கோ-11015 என்ற வகையான கரும்பு தருகின்றது. மற்ற கரும்புகள் முழுவதுமாக விளைய 12 மாதங்கள் ஆகும். ஆனால் கோ-11015 என்ற புதிய ரக கரும்பு 8 மாதம் முதல் 12 மாதத்திற்குள் அறுவடை செய்யும் வகையில் உள்ளது.
எனவே, விவசாயிகள் கோ-11015 என்ற கரும்பு ரகத்தை பயன்படுத்தினால் அதிக அளவில் மகசூல் கிடைக்கும். தமிழக அரசு கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்பு பயிரிடும் நிலங்களுக்கும் மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன திட்டத்தை பயன்படுத்த கூடுதல் சலுகைகள் வழங்கியுள்ளது. மற்ற பயிர்களுக்கு வழங்கும் சொட்டுநீர்ப் பாசனத்தின் மானியமாக ஒரு எக்டேருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது. ஆனால், கரும்பு பயிரிடும் நிலங்களுக்கு கூடுதலாக ரூ.38 ஆயிரத்து 235 சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 368 வழங்கப்படுகின்றது. எனவே, விவசாயிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோ-11015 என்ற ரக கரும்பினை பயிரிட்டு பயன்பெறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story