திருப்பத்தூர் அருகே, மது குடிப்பதற்காக தம்பதியை கொன்று நகை திருடிய தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்
திருப்பத்தூர் அருகே மதுகுடிப்பதற்காக கணவன்-மனைவியை கொன்று நகை திருடிய தொழிலாளிக்கு வேலூர் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
வேலூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த புலிகுத்தி வட்டம் தம்மனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 70), இவருடைய மனைவி மீனா (55). இவர்களுக்கு ஜெகநாதன், சந்திரசேகரன், சிவக்குமார் ஆகிய 3 மகன்கள். இவர்கள் அனைவரும் திருமணமாகி பெங்களூருவில் உள்ளனர்.
இதனால் ராஜேந்திரனும், அவருடைய மனைவி மீனாவும் தம்மனூர் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (44). தொழிலாளியான இவருக்கு சூதாடுவது, மதுகுடிப்பது போன்ற பழக்கங்கள் உண்டு. இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மதுகுடிக்க பெற்றோர் பணம் கொடுக்காததால் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
ராஜேந்திரனும், அவருடைய மனைவி மீனாவும் தனியாக வசித்து வருவதையும், மீனா கம்மல், மூக்குத்தி மற்றும் தாலி அணிந்திருப்பதையும், அவர் எப்போதும் ஒரு சுருக்கு பையில் பணம் வைத்திருப்பதையும் பார்த்த சக்திவேல் நகைகளை திருட திட்டமிட்டார்.
அதன்படி 3.1.2015 அன்று இரவு 11 மணியளவில் சக்திவேல் தனது வீட்டில் இருந்த உலக்கையை எடுத்துக்கொண்டு ராஜேந்திரனின் வீட்டுக்கு சென்றார். அங்கு ராஜேந்திரனும், மீனாவும் தூங்கிக்கொண்டிருந்தனர். ஆள் நடமாடும் சத்தம் கேட்டு ராஜேந்திரன் எழுந்து பார்த்துள்ளார்.
உடனே அவரை சக்திவேல் உலக்கையால் தலையில் அடித்தார். அவர் அலறும் சத்தம் கேட்டு மீனா எழுந்தபோது அவருடைய தலையிலும் சக்திவேல் உலக்கையால் அடித்தார். இதில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
உடனே மீனாவின் காதில் கிடந்த ஒரு கம்மல், தாலி கயிற்றில் கிடந்த காசு ஆகியவற்றை திருடிக்கொண்டு சக்திவேல் சென்றுவிட்டார். மறுநாள் இருவரும் கொலைசெய்யப்பட்டு கிடப்பது குறித்து பெங்களூருவில் உள்ள அவர்களுடைய மகன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக பெங்களூருவில் இருந்து வந்த ராஜேந்திரனின் மகன் சிவக்குமார் அதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜேந்திரன், மீனா ஆகிய இருவரையும் சக்திவேல் கொலைசெய்தது தெரியவந்தது. இதனையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் லட்சுமி பிரியா ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் சக்திவேலுக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இரட்டை ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story