கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், காளான் பண்ணை ஊழியர் கொன்று புதைப்பு - மனைவி, மேலாளருக்கு வலைவீச்சு


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், காளான் பண்ணை ஊழியர் கொன்று புதைப்பு - மனைவி, மேலாளருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Nov 2019 11:30 PM GMT (Updated: 8 Nov 2019 5:44 PM GMT)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காளான் பண்ணை ஊழியர் கொன்று புதைக்கப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெரும்பாவூர்,

இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே உள்ள புத்தடி பகுதியை சேர்ந்தவர் ரிஜோஸ் (வயது 31). இவரது மனைவி லிசி(29). இவர்களுக்கு ஜோவானா என 2 வயதில் மகள் இருக்கிறாள். ரிஜோஸ் புத்தடி அருகே உள்ள காளான் பண்ணையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த பண்ணையில் வசீம் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி முதல் ரிஜோசை காணவில்லை. மேலும் அவரது மனைவி லிசி மற்றும் வசீம் ஆகியோரை கடந்த 4-ந்தேதி முதல் காணவில்லை. எனவே இதுகுறித்து ரிஜோசின் உறவினர்கள் சாந்தாம்பாறை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிஜோசை தேடி வந்தனர்.

ரிஜோஸ் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காளான் பண்ணை தோட்டத்தில் மோப்பநாய் ஜெனி உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மோப்பநாய் காளான் பண்ணை அருகே 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தை காலால் தோண்டி அடையாளம் காட்டியது.

இதையடுத்து போலீசார் அந்த இடம் முழுவதையும் குழிதோண்டி பார்த்தனர். அப்போது பாதி உடல் தீயில் எரிந்த நிலையில் ரிஜோசின் உடல் குழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் லிசிக்கும், வசீமுக்கும் இடையே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தது தெரியவந்துள்ளது. எனவே ரிஜோசுக்கு, வசீம் மதுவில் வி‌‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்து தீ வைத்து எரித்து குழி தோண்டி புதைத்துள்ளார். இதற்கு லிசி உடந்தையாக இருந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே வசீம் ரிஜோசை தான் மட்டும் கொலை செய்ததாக போலீசுக்கு ஒரு வீடியோ பதிவு அனுப்பி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வசீம், லிசி ஆகியோரை பிடிக்க மூணாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமே‌‌ஷ்குமார், சிறப்பு குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பயஸ் ஜோர்ஜ், சாந்தாம்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார், ராஜாகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அனுமோள், வினோத்குமார், கோபி தாமஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ள வசீம் மற்றும் லிசி ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story