வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 9 Nov 2019 4:30 AM IST (Updated: 9 Nov 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 12 மணி நேரமாக சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அன்பு பிரகாஷ். இவர் 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக பல லட்சம் சொத்து சேர்த்ததாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் ரூ.38 லட்சம் வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மற்றும் வீட்டில் சோதனை நடத்த அனுமதி கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீது விசாரணை நடத்திய கோர்ட்டு, வீட்டில் சோதனை நடத்த நேற்றுமுன்தினம் அனுமதி அளித்தது.

அதன்பேரில் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயநகர் மணியாநகரில் உள்ள இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வீட்டுக்கு துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் நேற்று காலை 6.45 மணிக்கு திடீரென சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த அன்பு பிரகாஷிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை நேற்று மாலை 6.30 மணி வரை அதாவது 12 மணி நேரம் நடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story