குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் தூக்கமாத்திரைகளை தின்று பெண் தற்கொலை


குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் தூக்கமாத்திரைகளை தின்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 9 Nov 2019 4:00 AM IST (Updated: 9 Nov 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று கணவன்-மனைவி தற்கொலைக்கு முயன்றனர். அத்துடன் விஷமும் குடித்ததால் பெண் பரிதாபமாக இறந்தார்.

பனப்பாக்கம், 

சேலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 47). இவருக்கு தாய்-தந்தை இல்லாததால் அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தார். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் புரோகிராம் கற்றுக்கொண்டு அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். அப்போது ஆசிரமத்தின் அருகில் வசித்து வந்த சவுடேஸ்வரி (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

சவுடேஸ்வரி திருமணமாகி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இதனால் அவரை ராஜேஷ் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் வேலூர் மாவட்டம் ஓச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். வாடகை கட்டணம் அதிகமாக இருந்ததால் அந்தத் தொகையை அவர்களால் கொடுக்க முடியாமல் 2 மாதத்தில் வீட்டை காலி செய்து விட்டு, ஆயர்பாடி ரோட்டு தெருவில் உள்ள வேறொரு வீட்டுக்கு வாடகைக்கு சென்றனர்.

அங்குப் போனபிறகும் போதிய வருமானம் இல்லாததால் அவர்களால் வீட்டு வாடகையை கொடுக்க முடியவில்லை. மேலும் வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்களை கூட வாங்க பணமின்றி சிரமப்பட்டு வந்தனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி 6-ந் தேதி இரவு இருவரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று விட்டு படுத்துத் தூங்கினர். நள்ளிரவு நேரத்தில் சவுடேஸ்வரி கண் விழித்துள்ளார். மாத்திரைகளை தின்றும் சாகாததால் அவர் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு படுத்துக்கொண்டார்.

மறுநாள் காலை ராஜேஷ் மயக்க நிலையில் கண்விழித்து பார்த்துள்ளார். அப்போது சவுடேஸ்வரி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து, சவுடேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராஜேஷ் தூக்க மாத்திரைகளை தின்று அவருக்கு எந்த வித பிரச்சினையும் இல்லாததால் உயிர்தப்பினார். இது குறித்து ராஜேஷ் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story