லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது கணக்கில் வராத பணம் பறிமுதல்: திருவாரூர் சார்பதிவாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
திருவாரூர் சார்பதி வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.22 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சார்பதிவாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்,
திருவாரூர் தெற்கு வீதியில் டவுன் போலீஸ் நிலையம் அருகில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. மாவட்ட தலைநகர் என்பதால் எப்போதும் பொதுமக்கள் கூட்டத்துடன் இந்த அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் இமயவரம்பன், தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் அதிரடியாக சார்பதி வாளர் அலுவலகத்துக்குள் புகுந்து சோதனை நடத்தினர்.
அந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், பத்திரங்கள், பதிவு கட்டணமாக பெற வேண்டிய வரைவோலை போன்றவைகளை சோதனை செய்தனர். அப்போது சார்பதிவாளர் பாலாஜியிடம், பதிவு விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அதிகாலை 3 மணி வரை நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.22 ஆயிரத்து 300 சிக்கியது. இதனை தொடர்ந்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத ரூ.22 ஆயிரத்து 300 குறித்து சார்பதிவாளர் பாலாஜி மற்றும் இடைத்தரகர்கள் விநாயகம், தியாகராஜன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story