மேல்முறையீடு: தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் 8,942 மனுக்கள் நிலுவையில் உள்ளன - ஆணையாளர் முருகன் பேட்டி


மேல்முறையீடு: தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் 8,942 மனுக்கள் நிலுவையில் உள்ளன - ஆணையாளர் முருகன் பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2019 10:00 PM GMT (Updated: 8 Nov 2019 9:20 PM GMT)

தமிழகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு பதில் வராமல் மேல்முறையீடு செய்த 8 ஆயிரத்து 942 மனுக்கள் ஆணையத்தில்நிலுவையில் உள்ளதாக, மாநில தகவல் ஆணையாளர் முருகன் கூறினார்.

நெல்லை,

தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 குறித்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை, பொதுத்துறை தகவல் தெரிவிக்கும் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாநில தகவல் ஆணையாளர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் தகவல் அறியும் உரிமை சட்டம் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்களை விசாரித்து ஆணையம் தீர்ப்பு வழங்கி வருகிறது. பொதுமக்கள் கேட்கும் தகவல்களுக்கு 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்றால் தகவல் தெரிவிக்காத ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 வீதம் அபராதம் விதிக்கப்படும். தகவல் அறியும் உரிமை ஆணையத்திற்கு இதுவரை 17 ஆயிரத்து 788 மனுக்கள் 2-வது மேல்முறையீட்டுக்காக வந்துள்ளது. இதில் 1-10-2019 வரை 8,846 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 942 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் நில அளவைத்துறையில் ஒருவர் கேட்ட நடப்பு கோப்பு, குறிப்பு கோப்பு குறித்த தகவலுக்கு பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர் தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து ஆணையம் அந்த கோப்புகளை உடனே வழங்க உத்தரவிட்டது. அந்த தகவலை வழங்க மறுத்த முந்தைய தகவல் அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கேட்கும் தகவல்களை குறித்த காலத்திற்குள் வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story