விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதையடுத்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்று மாலை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தொடக்க உரையாற்றினார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன் அனைவரையும் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, பிரபு, விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் சிந்தாமணி வேலு, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்கஜோதி, சிவக்குமார், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, பா.ம.க. மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில துணைத்தலைவர் அரிகரன், மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், த.மா.கா. மாவட்ட தலைவர் தசரதன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் விநாயகம், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட வைத்திலிங்கம் எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, அன்பழகன், எம்.சி.சம்பத், கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக் கண்ணு, வீரமணி, பெஞ்சமின், நிலோபர்கபில், பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கொறடா ராஜேந்திரன், செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவன் ஆகியோர் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவை அறிய இந்தியாவே எதிர்பார்த்தது. 2 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு, மக்களை ஏமாற்றி வெற்றிபெற்று விட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வேறு. சட்டமன்ற தேர்தல் வெற்றி வேறு. இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு நான், மக்களுக்கு மிட்டாய், அல்வா கொடுத்து வெற்றிபெற்று விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார். நான் மக்களுக்கு மிட்டாய், அல்வா கொடுக்கவில்லை. 2 தொகுதி மக்களும் மு.க.ஸ்டாலினுக்குத்தான் அல்வா கொடுத்துவிட்டார்கள். மு.க.ஸ்டாலினின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. தர்மம், நீதி வென்றது. மொத்தத்தில் உண்மை வென்றது. நாங்கள் உண்மையை பேசினோம். நிறைவேற்றப்படும் திட்டங்களை எடுத்துக்கூறினோம், வெற்றிபெற்றோம். இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் திரும்பி பார்க்க வைத்த வெற்றி. மு.க.ஸ்டாலின் என்ன பேசுவதென்று தெரியாமல் ஏதேதோ பேசுகிறார். அவர் நிலைதடுமாறி பேசுகிறார்.
இன்று பல பேர் அரசியலுக்கு புறப்பட்டு விட்டார்கள். சினிமா துறையில் இருந்தும் வருகிறார்கள். இந்த தேர்தல் முடிவை பார்த்தும், சிலர் இன்னும் ஆட்சி அமைப்போம் என்று கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்கள். இது அரசியல். சினிமா அல்ல. அரசியலை தொழில் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ திடீரென பிரவேசித்து பதவிக்கு வந்து விட முடியாது. அப்படி ஆட்சி பொறுப்பை கொடுக்கிற மக்களும் தமிழ்நாட்டு மக்கள் அல்ல. யார் வேண்டுமானால் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சி அமைப்பது அ.தி.மு.க.தான்.
ஏனென்றால் எம்.ஜி.ஆர். முதலில் எம்.எல்.ஏ.வாக இருந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்தார். அவர் நேரடியாக முதல்-அமைச்சர் பதவிக்கு வரவில்லை. அதற்காக பல கஷ்டங்களை அனுபவித்தார். வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்.. தனது திரைப்படம் மூலமும் நாட்டு மக்களின் நிலையை எடுத்துக்கூறினார். ஆனால் சில விஷமிகள், அவருடைய உழைப்பை மட்டும் பயன்படுத்திக்கொண்டனர். எனவே மக்களுக்கு நன்மை செய்ய, அண்ணாவின் கனவை நினைவாக்க எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. வை உருவாக்கினார். ஆட்சி அமைத்தார். எம்.ஜி.ஆரை போன்று யாரும் திரையுலகில் இருந்து வரமுடியாது. அவரை போன்று நாட்டு மக்களுக்காக உழைத்தவர்கள் வேறு யாரும் கிடையாது.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதா வந்தார். ஜெயலலிதாதான் தனது ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். இந்த திட்டங்களால் அடித்தட்டு மக்களும் உயர் நிலைக்கு வந்தார்கள். உழைப்பின் மூலம் அடையாளம் காட்டப்பட்டவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. உழைப்பால் உயர்ந்த இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. அரசியலுக்கு எத்தனையோ பேர் வந்தாலும் காணாமல் போய்விடுகிறார்கள். நமது இயக்கத்தை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று சிலர் சதித்திட்டம் செய்தார்கள். ஆனால் அவர்களை வேரோடு சாய்த்து காட்டிய கட்சி அ.தி.மு.க. அ.தி.மு.க. கூட்டணி பலம் வாய்ந்த மெகா கூட்டணி. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா, ச.ம.க. உள்ளிட்ட பல கட்சிகள் அங்கம் வகிக்கிறது. நமது கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்படுகிறோம். இதற்கு இடைத்தேர்தல் வெற்றியே எடுத்துக்காட்டு.
நாங்குநேரி, விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் முகாமிட்டு பிரசாரம் செய்தபோது, இந்த இடைத்தேர்தல் முடிவு, அடுத்து வருகிற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் முன்னோடி தேர்தல் என்று கூறினார். அதற்கு தகுந்தபடி வாக்காளர்கள், அவருக்கு சம்மட்டி அடி கொடுத்தார்கள். நாடாளுமன்ற தேர்தலில் ஏமாற்றி விட்டீர்கள், வஞ்சித்து விட்டீர்கள் என்று வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள்
இந்த உத்வேகத்தோடு உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் நினைத்தது ஒன்று. ஆனால் நடந்தது ஒன்று. அ.தி.மு.க.வில் வெற்றிடம் உள்ளது என்று சொன்னவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இது. நாங்குநேரி காங்கிரஸ் கோட்டை என்று வர்ணித்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றிருக்கிறார். தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை 2 தொகுதி இடைத்தேர்தல் வெற்றி காட்டுகிறது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு நற்சான்றிதழ் கொடுத்த தேர்தல் இந்த தேர்தல். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனையோ சோதனைகளை சந்தித்தோம். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ போராட்டங்களை தூண்டிவிட்டார். ஆட்சியை கவிழ்க்க பல சதி செய்தார். அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்கவும் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை. மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். நல்ல எண்ணம் இருந்தால்தானே அந்த பதவிக்கு வரமுடியும்.
கருணாநிதி உயிரோடு இருந்த வரை மு.க.ஸ்டாலினை நம்பவில்லை. அவரை நம்பி கட்சி தலைவர் பதவியை கொடுக்கவில்லை. செயல் தலைவர் பதவியைத்தான் கொடுத்தார். அப்பாவே நம்பவில்லையென்றால் நாட்டு மக்கள் எப்படி உங்களுக்கு அங்கீகாரம் கொடுப்பார்கள். தமிழ்நாட்டை உங்களிடம் மக்கள் எப்படி ஒப்படைப்பார்கள். இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பேச்சை நிறுத்தி விட்டார்.
உள்ளாட்சி துறை, மின்துறை, உயர்கல்வித்துறை, சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, போக்குவரத்துத்துறை, வேளாண்மைத்துறை என ஒவ்வொரு துறைகளிலும் பல திட்டங்களை செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி, திறமையான நிர்வாகம் நடைபெறுவதால் பல துறைகளில் சாதித்து, இந்தியாவிலேயே அதிக விருதுபெற்ற மாநிலமாக திகழ்கிறது.
தி.மு.க. மாநிலத்திலும், மத்தியிலும் அங்கம் வகித்தபோது எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. கொள்ளையடித்ததுதான் மிச்சம். அவர்களது குடும்பத்தை கவனிக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. நாட்டு மக்களை கவனிக்கவில்லை. இனிமேல் மு.க.ஸ்டாலினுக்கு வேலை இருக்காது. அந்த சூழ்நிலையை மக்கள் உருவாக்கிவிட்டார்கள். நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து, மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறோம். நாங்கள் செய்ததை புள்ளி விவரத்தோடு சொல்லி வருகிறோம். ஆனால் அ.தி.மு.க. அரசு எந்த திட்டங்களையும் செய்யவில்லை என்று பொய்யான தகவலை மு.க.ஸ்டாலின் மக்களிடம் கூறி வருகிறார். அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள். வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் விக்கிரவாண்டி நகர செயலாளர் பூர்ணராவ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story