முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளிநாடு செல்ல அனுமதி பெற்றாரா? கவர்னர் கிரண்பெடி கேள்வி


முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளிநாடு செல்ல அனுமதி பெற்றாரா? கவர்னர் கிரண்பெடி கேள்வி
x
தினத்தந்தி 9 Nov 2019 4:15 AM IST (Updated: 9 Nov 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா? என்று கவர்னர் கிரண்பெடி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் சிங்கப்பூர் சென்றுள்ளனர். அவர்கள் புதுவையில் தொழில் தொடங்க வருமாறு வெளிநாட்டு தொழில் அதிபர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.

இந்தநிலையில் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் நாராயணசாமி தனிப்பட்ட முறையில் மீண்டும் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தனிப்பட்ட பயணத்தின்போது ஏன் அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும்?.

விதிமுறைகளின்படி வெளிநாட்டு பயணங்களின்போது உரிய அனுமதி பெறவேண்டும். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அனுமதிபெற வேண்டும். ஆனால் முதல்-அமைச்சர் கடந்த காலங்களிலும் உரிய அனுமதி பெற்றாரா? என்பது தெரியவில்லை.

அதேபோல் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவும் இலங்கைக்கு சென்றபோதும் அனுமதி பெறவில்லை. இதுகுறித்த தகவல்களை மத்திய அரசு ஏற்கனவே கேட்டுள்ளது. நான் புதுவை மாநிலத்தின் நிர்வாகியாக துறைசார் வழக்குகளை கையாண்டு வருகிறேன். எந்த முன் அனுமதியும் பெறாமல் அதிகாரிகள் வெளிநாட்டிற்கு செல்வது ஒழுக்கமற்ற செயலாக கருதப்பட்டு தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

வெளிநாட்டு பயணங்கள் குறித்த எந்த தகவலும் இல்லை என்பதால் மாநிலத்தின் பாதுகாப்பின் நலனுக்காக இதை இந்திய அரசுக்கு புகார் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தனிப்பட்ட பயணத்தின்போது அவர்களை யார் அழைத்து செல்கிறார்கள்? நிதி அளிக்கிறார்கள்? என்தை இந்திய அரசு அறிந்திருக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் கேசினோ (சூதாட்ட விடுதி) குறித்தும் பேசியுள்ளார். அதை புதுச்சேரி மக்கள் விரும்புகிறார்களா?

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Next Story