அனைத்து குற்ற வழக்கு சாட்சியங்களையும் வீடியோ பதிவு செய்யலாமா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


அனைத்து குற்ற வழக்கு சாட்சியங்களையும் வீடியோ பதிவு செய்யலாமா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 8 Nov 2019 10:45 PM GMT (Updated: 2019-11-09T02:57:38+05:30)

அனைத்து குற்ற வழக்கு சாட்சியங்களையும் வீடியோ பதிவு செய்யலாமா? என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மதுரை, 

மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் நேற்று குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்தனர் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 மாதங்களாக குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்து வருகிறோம். இந்த வழக்குகளில் ஏராளமானவர்கள் பிறழ்சாட்சி கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலையானது தெரியவந்துள்ளது. இது தொடர்ந்தால் குற்றவியல் நீதி அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும்.

சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ மற்றும் வீடியோ பதிவு செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் பிறழ்சாட்சியாக மாறும்போது ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தை சரிபார்க்கலாம். இதன் மூலம் குற்றவாளிகள் தப்பிப்பது தடுக்கப்படும். இந்த நடைமுறை கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் வீடியோ மற்றும் ஆடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்க, அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ மற்றும் வீடியோவில் பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

இதற்கு வக்கீல்கள் ஒத்துழைக்க வேண்டும். இதுபற்றி போலீசாரிடமும் உரிய தகவல் கேட்டு அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும்.

தேவைப்படும்பட்சத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆஜராகுமாறு தெரிவிக்கப்படும். இதுதொடர்பான வழக்கு வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story