சோமசீலா அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு
சோமசீலா அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,
கிருஷ்ணா நதி நீர் பங்கிடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீீர் வழங்க வேண்டும். அதன்படி நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீீர் வழங்க வேண்டும்
ஆனால் கோடை வெயில் காரணமாக கண்டலேறு அணை வறண்டது. அதன் பின்னர் மழை பெய்ததால் கடந்த செம்டம்பர் மாதம் 25-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. இதனால் பூண்டி ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில், இணைப்பு கால்வாய் மூலம் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்ய கிருஷ்ணா நதி கால்வாயில் இருந்து நீர் எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து குறைந்து வருகிறது. இந்தநிலையில் ஆந்திராவில் உள்ள சோமசீலா அணை நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கண்டலேறு அணைக்கு நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 1 டி.எம்.சி. தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒரு வாரத்துக்குள் அங்குள்ள நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் 68 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்றைய நிலவரப்படி அணையில் 40 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
இன்னும் சில தினங்களில் கண்டலேறு அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
ஆகையால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கூடுதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 29.20 அடியாக பதிவானது. 1,550 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 170 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. மழை மற்றும் கிருஷ்ணாபுரம் அணை நீர் வினாடிக்கு 175 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 730 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 22 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
Related Tags :
Next Story