பெங்களூருவில் டாக்டரை தாக்கிய வழக்கில் கன்னட அமைப்பின் மகளிர் அணி தலைவி உள்பட 12 பேர் போலீசில் சரண்


பெங்களூருவில் டாக்டரை தாக்கிய வழக்கில் கன்னட அமைப்பின் மகளிர் அணி தலைவி உள்பட 12 பேர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 9 Nov 2019 4:30 AM IST (Updated: 9 Nov 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் டாக்டரை தாக்கிய வழக்கில் கன்னட அமைப்பின் மகளிர் அணி தலைவி உள்பட 12 பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் மிண்டோ அரசு கண் ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதுகுறித்து அறிந்த கன்னட அமைப்பினர் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று, நோயாளிக்கு சிகிச்சை அளிக்காதது பற்றி டாக்டர்களிடம் கேட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட டாக்டர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட தகராறில் டாக்டர் ஒருவரை கன்னட அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வி.வி.புரம் போலீசில் அந்த டாக்டர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், டாக்டரை கன்னட அமைப்பினர் தாக்கியதை கண்டித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் டாக்டரை தாக்கிய கன்னட அமைப்பினரை கைது செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில், நேற்று மதியம் கன்னட அமைப்பின் தலைவரான நாராயணகவுடா தலைமையில், அந்த அமைப்பின் மகளிர் அணி தலைவி அஸ்வினிகவுடா உள்ளிட்டோர் வி.வி.புரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் மிண்டோ ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டரை தாக்கிய வழக்கில் அஸ்வினி கவுடா உள்பட 12 பேர் போலீசில் சரண் அடைந்தனர். இதையடுத்து, 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் நேற்று மாலையில் பெங்களூரு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் அஸ்வினிகவுடா உள்பட 12 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதே நேரத்தில் 12 பேர் சார்பிலும் ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி 12 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். 

Next Story