மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் 15 தொகுதி இடைத்தேர்தலை ஒத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு + "||" + Supreme Court refuses to postpone 15 seat byelection in Karnataka

கர்நாடகத்தில் 15 தொகுதி இடைத்தேர்தலை ஒத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

கர்நாடகத்தில் 15 தொகுதி இடைத்தேர்தலை ஒத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. அதனை தொடர்ந்து புதிய மனு ஒன்றை தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தாக்கல் செய்து உள்ளனர்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. இதை யடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக வழங்கப்பட்ட புகாரை ஏற்று அப்போது சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார், 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய கோரி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, கடந்த மாதம் இறுதியில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வாரம் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வெளியாகவில்லை.

15 தொகுதிகளுக்கு அறிவிக் கப்பட்டுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. அதாவது மனு தாக்கல் தொடங்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. சபாநாயகரின் உத்தரவுப்படி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது. தீர்ப்பு தாமதமாவதால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் வக்கீல் முகுல் ரோட்டகி, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி வாதிட்டார்.

அவர் கூறுகையில், “தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு கடைசி நாளுக்குள் தீர்ப்பு வெளியாகாவிட்டால், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். அதனால் தீர்ப்பு வெளியாகும் வரை இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டார்.

முகுல் ரோட்டகியின் இந்த வாதத்தை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதி என்.வி.ரமணா, “தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இடைத்தேர்தலை ஒத்திவைப்பது என்பது சாத்தியமில்லை. வேண்டுமானால் நீங்கள் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்யுங்கள். அதுகுறித்து பரிசீலிக்கிறோம்“ என்றார்.

அதைத்தொடர்ந்து முகுல் ரோட்டகி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது வருகிற 13-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறினர். நீதிபதிகள் அன்றைய தினமே முடிவை அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? அல்லது தீர்ப்பு அறிவிக்கப்படுமா? என்பது அன்று தெரியவரும்.

இடைத்தேர்தலை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டதால், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். கர்நாடக சட்டசபையில் தற்போது மகாலட்சுமி லே-அவுட், ராஜராஜேஸ்வரி நகர், சிவாஜிநகர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், எல்லாப்புரா, இரேகூர், சிக்பள்ளாப்பூர், ஒசக்கோட்டை, காக்வாட், விஜயநகர், அதானி, கோகாக், மஸ்கி, கே.ஆர்.பேட்டை, உன்சூர், ராணிபென்னூர் ஆகிய 17 தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் ராஜராஜேஸ்வரிநகர், மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர, மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை