பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன பயன்? சித்தராமையா கேள்வி


பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன பயன்? சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 9 Nov 2019 5:15 AM IST (Updated: 9 Nov 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன பயன்? என்று சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு, 

பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பண மதிப்பிழப்பு முடிவை அறிவித்தார். இதுகுறித்து கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்த நாளை (நேற்று) பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட தினம் என்று கூறுவதைவிட நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை பறித்து கொண்ட தினம் என்று சொல்வது சரியாக இருக்கும். அன்று பணத்தை செலுத்த மக்கள் வங்கிகளின் வாசலில் நின்று பலர் இறந்தனர். அதன் எதிரொலியாக வேலையிழப்பு, தொழிலில் நஷ்டம் போன்றவற்றால் அத்தகைய இறப்பு சம்பவங்கள் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றன.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது அது கோமா நிலையில் உள்ளது. இந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

நாட்டின் நிதி மந்திரியாக உள்ள பெண்ணின் கணவரே, அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றி குறை கூறி கட்டுரை எழுதியது கவனிக்க வேண்டிய விஷயம். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு சேவைத்துறை குறைந்தபடியே வந்தது. அது தற்போது மிக மோசமாக குறைந்துள்ளது. கச்சா பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான்.

அரசின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கும் பிரதமர் மோடி, பாலக்கோட் ராணுவ தாக்குதலுக்கு மட்டுமே தான் செய்த சாதனை என்பது போல் பேசுகிறார். ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததால், ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பொறுப்பு யார்?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் பயங்கரவாதத்தை ஒழிப்பதும் ஒன்று என்று பிரதமர் கூறினார். ஆனால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்துடன் ஒப்பிடுகையில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல்கள் 176 சதவீதம் அதிகரித்துள்ளது.

மோடியின் ஆட்சியில் இதுவரை 1,706 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன பயன்?. சரியான திட்டமிடல் இல்லாமல் பணமதிப்பிழப்பு திட்டத்தை அமல்படுத்தியதால், நாட்டில் இதுவரை 50 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய அரசு, பக்கோடா விற்பனை செய்ய ஆலோசனை சொன்னது, பெரும் வேதனைக்குரியது.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Next Story