அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு


அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 10:15 PM GMT (Updated: 2019-11-10T00:04:23+05:30)

அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பட்டிவீரன்பட்டி, 

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த வாரம் அணை முழு கொள்ளளவை எட்டியது. தற்போது அணைக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரம் 72 அடியாகும். தற்போது அணையில் 71 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. நீர் இருப்பு 180 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதனால் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரப்பன் தலைமை தாங்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், உதவி பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மருதாநதி அணை தண்ணீர் மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களுக்கு உட்பட்ட சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர அணையில் இருந்து பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி போன்ற பேரூராட்சிகளுக்கும், சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி போன்ற ஊராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, மருதாநதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு விவசாயத்திற்காக நாள் ஒன்றுக்கு 20 கன அடி வீதம் 90 நாட்களுக்கும், மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டு விவசாயத்திற்கு நாள் ஒன்றுக்கு 70 கன அடி வீதம் 30 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 90 கனஅடி தண்ணீர் முதல் போக சாகுபடிக்காக திறந்துவிடப்பட்டுள்ளது என்றனர்.

Next Story