காரில் கடத்தப்பட்ட 1,920 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது


காரில் கடத்தப்பட்ட 1,920 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2019 4:30 AM IST (Updated: 10 Nov 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே காரில் கடத்தப்பட்ட 1,920 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர்.

நாகூர்,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு மதுபானங்கள் கடத்தி வரப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழக எல்லையான நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்வதற்காக போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.

கார் பறிமுதல்

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் உள்ள மேல நாகூர் அருகே மடக்கி பிடித்தனர். அப்போது காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் நடத்திய விசாரணையில் மேலவாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த சிலம்பரசன் (வயது 30) என்பவர் காரில் திருத்துறைப்பூண்டிக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட 1,920 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ. 10 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story