கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்து வீசப்பட்ட கார் புரோக்கரின் தலை-உடல் மீட்பு - கோவில்பட்டி கோர்ட்டில் 2 பேர் சரண்
புதியம்புத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட கார் புரோக்கரின் தலை-உடல் நேற்று மீட்கப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்ட 2 பேர் கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
ஓட்டப்பிடாரம்,
நெல்லை மாவட்டம் நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 50), கார் புரோக்கர். மாவட்டத்தில் நடந்த கார் திருட்டு வழக்குகளில் நெல்லை குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் ராஜபாண்டி செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, அவரது செல்போன் 20 நாட்களாக சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதில் வன்னிக்கோனேந்தலை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சித்ரா (20), தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்த ராமர் (23) ஆகியோர் அதிக நேரம் பேசி இருப்பது தெரியவந்தது.
பின்னர் சந்தேகத்தின்பேரில் சித்ரா, ராமர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, புதியம்புத்தூர் அருகே ராஜபாண்டியை கொலை செய்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சித்ரா, ராமர் ஆகியோரை நெல்லை போலீசார், புதியம்புத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
சித்ரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து நெல்லையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கும், ராஜபாண்டிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் ராஜபாண்டி, சித்ராவை புதியம்புத்தூர் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைத்தார்.
அப்போது, அங்கு சித்ராவுக்கும் ராஜபாண்டியின் கார் டிரைவரான ராமருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ராஜபாண்டி, சித்ராவை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த ராமர், கடந்த மாதம் 16-ந் தேதி தனது மனைவி லட்சுமி, உறவினர்களான நடுவக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் (23), முத்துகனிராஜ் (20) ஆகியோருடன் சித்ரா வீட்டுக்கு வந்தனர். அப்போது, அங்கு இருந்த ராஜபாண்டியை வெட்டிக் கொலை செய்து தலையை துண்டித்தனர். பின்னர் தலையை சித்ரா வசித்து வந்த வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றிலும், உடலை தட்டப்பாறையில் உள்ள கல்குவாரியிலும் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ரா, ராமரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மற்ற 3 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சித்ரா, ராமர் ஆகியோர் அளித்த தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், தடயவியல் உதவி இயக்குனர் கலைச்செல்வி, ஜம்புலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் செல்வகணேஷ் மற்றும் போலீசார் பாழடைந்த கிணற்று பகுதிக்கு நேற்று சென்றனர். தொடர்ந்து கிணற்றில் இருந்து ராஜபாண்டியின் தலை அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
மேலும் தட்டப்பாறை கல்குவாரியில் கிடந்த உடலையும் போலீசார் மீட்டனர். பின்னர் அவற்றை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதற்கிடையே, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சக்திவேல், முத்துகனிராஜ் ஆகியோர் கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை 15-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) முரளிதரன் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராமர் மனைவி லட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதியம்புத்தூர் அருகே கொன்று வீசப்பட்ட கார் புரோக்கரின் தலை- உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story