மதுரவாயல் சுங்கச்சாவடியில் ‘ஹாரன்’ அடித்ததால் தகராறு; தே.மு.தி.க. நிர்வாகி மீது தாக்குதல் - தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு


மதுரவாயல் சுங்கச்சாவடியில் ‘ஹாரன்’ அடித்ததால் தகராறு; தே.மு.தி.க. நிர்வாகி மீது தாக்குதல் - தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Nov 2019 4:30 AM IST (Updated: 10 Nov 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

மதுரவாயல் சுங்கச்சாவடியில் ஹாரன் அடித்ததால் ஏற்பட்ட தகராறில் தே.மு.தி.க. நிர்வாகியை தாக்கிய புதுச்சேரியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்ற ஆரோக்ய ரவி (வயது 42). தே.மு.தி.க. நிர்வாகியான இவர், சொந்தமாக பேக்கரி நிறுவனம் நடத்தி வருகிறார்.

ரவி, நேற்று முன்தினம் மாலை தனது காரில் அம்பத்தூர் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் மதுரவாயல் சுங்கச்சாவடியில் வரிசையில் காத்து நின்றார். அப்போது அவரது காருக்கு பின்னால் புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட மற்றொரு கார் வந்து நின்றது.

காரில் இருந்த நபர், ‘ஹாரன்’ அடித்தபடி இருந்தார். இதனால் ரவி, “எதற்காக ‘ஹாரன்’ அடித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?. முன்னால் நிற்கும் வாகனம் சென்றால்தானே நான் போக முடியும்” என்றார்.

ஆனால் அந்தநபர் தொடர்ந்து ‘ஹாரன்’ அடித்துக் கொண்டே இருந்ததால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் காரில் இருந்து கீழே இறங்கி வந்த நபர், திடீரென தே.மு.தி.க. நிர்வாகி ரவியின் முகத்தில் கையால் சரமாரியாக குத்திவிட்டு தனது காரில் ஏறி வேகமாக சென்றுவிட்டார்.

இதில் ரவியின் வலது கண் புருவத்தின் மேல்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இந்த மோதல் சம்பவம் காரணமாக சுங்கச்சாவடியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பிய ரவி, இதுபற்றி மதுரவாயல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபரின் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில் ரவியை தாக்கியது புதுச்சேரியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பழனிக்குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story