மாவட்ட செய்திகள்

கூடலூர்-மைசூரு சாலையில் உலா வரும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது + "||" + Kutalur will tour Mysore Road Do not disturb wildlife

கூடலூர்-மைசூரு சாலையில் உலா வரும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது

கூடலூர்-மைசூரு சாலையில் உலா வரும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது
கூடலூர்-மைசூரு சாலையில் உலா வரும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
கூடலூர்,

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்டு உள்ளது. அதிலும் குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கு காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், செந்நாய்கள், புலிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அரிய வகை தாவரங்களும், மரங்களும் உள்ளன. இதனால் உயிர் சூழல் மண்டலமாக அது திகழ்கிறது. முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில் மாயார் ஆறு ஓடுகிறது. முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள், மேற்கண்ட சாலையை கடந்து மாயார் ஆற்றுக்கு தண்ணீர் குடிக்க வந்து செல்வது வழக்கம். இதனால் அவ்வப்போது அந்த சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

இதற்கிடையில் கூடலூர்-மைசூரு சாலையில் வாகன போக்குவரத்தும் அதிகளவில் உள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கும் இயக்கப்படுகின்றன. இதனால் பிரதான சாலையாக அது உள்ளது.

இந்த நிலையில் கூடலூர்-மைசூரு சாலையில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் மேற்கண்ட சாலையோரங்களில் புற்கள் அதிகளவில் வளர்ந்து உள்ளன. அவற்றை தின்பதற்காக காட்டுயானைகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரங்களில் முகாமிடுகின்றன. மேலும் மாயார் ஆற்றுக்கு தண்ணீர் குடிப்பதற்காக சாலையை கடந்தும் சென்று வருகின்றன. இதேபோன்று மஞ்சூர்-கோவை சாலையிலும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அங்குள்ள கெத்தை பகுதியில் நேற்று காலை 9 மணியளவில் குட்டியுடன் 4 காட்டுயானைகள் உலா வந்தன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரம் சாலையிலேயே முகாமிட்டு இருந்த காட்டுயானைகள், அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன. இதையடுத்து மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.

காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளில் உலா வரும்போது, அந்த வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியால் வனவிலங்குகளை பார்த்து கூச்சலிடுகின்றனர். மேலும் வாகனங்களை விட்டு கீழே இறங்கி செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதனால் அவர்கள் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்பதை உணருவது இல்லை. சில நேரங்களில் காட்டுயானைகள் வாகனங்களை துரத்தும் சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளது. எனவே நீலகிரி மாவட்ட சாலைகளில் உலா வரும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து முதுமலை வனத்துறையினர் கூறியதாவது:-

முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும் கூடலூர்-மைசூரு சாலையில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதே நிலை மஞ்சூர்-கோவை சாலையிலும் இருக்கிறது. காட்டுயானைகள் திடீரென மிரண்டு தாக்குதலில் ஈடுபடும் தன்மை உடையவை.

எனவே அவைகளை சீண்டும்போது திடீரென தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். சாலையில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நின்றால், யாரும் வாகனங்களை விட்டு கீழே இறங்கக்கூடாது. அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது. ஆர்வமிகுதியால் கூச்சலிட்டு அவைகளை சீண்ட வேண்டாம். அவைகளை தொந்தரவு செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.