ஈரோட்டில் அடுத்தடுத்த சம்பவங்களால் பரபரப்பு: 4 பெண்களிடம் 18 பவுன் நகை பறிப்பு
ஈரோட்டில் அடுத்தடுத்து 4 பெண்களிடம் 18 பவுன் நகையை பறித்துச்சென்ற மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணன் வீதி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 71). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மூதாட்டியிடம், ஒருவரின் பெயரை கூறி அவருடைய முகவரியை கேட்டுள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி தனக்கு தெரியாது என்று கூறியபடி வீட்டுக்குள் செல்ல முயன்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒருவன் சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை வெடுக்கென பறித்தான். இதனால் அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து சரஸ்வதி இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் ஈரோட்டில் நேற்று முன்தினம் மாலை மேலும் 3 நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
ஈரோடு நாடார்மேடு பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி மாலதி (வயது 45). இவர் ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மாலதியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர். ஈரோடு கோட்டை பழனி கவுண்டர் வீதியை சேர்ந்த மல்லிகேஷ்வரி (52) என்பவர், முத்துத்தெரு பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்துச்சென்றனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற, மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கருங்கல்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் ஒரு பெண்ணிடம் நகை பறிப்பு முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர். ஈரோடு வில்லரசம்பட்டி பகுதிக்கு நேற்று முன்தினம் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்ததால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஈரோடு மாநகர் பகுதியில் அடுத்தடுத்து 4 பெண்களிடம் 18 பவுன் நகையை மோட்டார்சைக்கிள் திருடர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story