ஈரோடு திருநகர் காலனியில் ஆபத்தான குழியை மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு திருநகர் காலனியில் உள்ள ஆபத்தான குழியை மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு திருநகர் காலனி பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டோரத்தில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழாயில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி கொண்டு இருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் மிகுந்த தூர்நாற்றம் வீசியது.
அதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரிசெய்யக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பந்தபட்ட இடத்துக்கு சென்று, குழாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரிசெய்யவேண்டி பெரிய அளவில் குழி தோண்டினர். பின்னர் தோண்டப்பட்ட குழியை மூடாமலேயே மாநகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
கடந்த சில நாட்களாக பெய்த மழை காணரமாக அந்த குழி முழுவதும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இரவு நேரத்தில் அந்த குழி சரிவர தெரியாததால், அந்த வழியாக சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து காயங்களுடன் செல்கிறார்கள்.
மேலும் குழி உள்ள இடத்தின் அருகில் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் அந்த வழியாக ஏராளமான மாணவ -மாணவிகள் நடந்து செல்கிறார்கள். மாணவ -மாணவிகள் அந்த குழிக்குள் விழ அதிக அளவில் வாய்ப்பும் உள்ளது.
எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதுவும் நடைபெறுவதற்கு முன்பு அந்த குழியை மூட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ -மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story