வாலாஜாவில் பீடி மண்டி அதிபரின் வீட்டில் கதவை உடைத்து ரூ.27 லட்சம் நகை - பணம் கொள்ளை


வாலாஜாவில் பீடி மண்டி அதிபரின் வீட்டில் கதவை உடைத்து ரூ.27 லட்சம் நகை - பணம் கொள்ளை
x
தினத்தந்தி 11 Nov 2019 4:45 AM IST (Updated: 10 Nov 2019 11:27 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜாவில் பீடி மண்டி அதிபரின் வீட்டில் கதவை உடைத்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாலாஜா, 

வாலாஜாவில் உள்ள கிராமணி தெருவில் வசிப்பவர் சரவணன் (வயது 50), சொந்தமாக பீடி மண்டி நடத்தி வருகிறார். அவருடைய மனைவி கோமளா (42). இவர்களுக்கு அரிபாபு (28) என்ற மகனும், பவித்ரா (24), பாரதி (20) என 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் சரவணனின் மூத்த மகள் பவித்ராவிற்கு நேற்று காலை ஆரணியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக நேற்று முன்தினம் மாலை சரவணன் தனது குடும்பத்தினருடன் ஆரணிக்கு சென்றுவிட்டார்.

திருமணம் முடிந்து நேற்று சரவணன் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் மர்ம நபர்கள் வீடு முழுவதும் மற்றும் காம்பவுண்டு சுவர் பகுதியில் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் ரூ.27 லட்சம் இருக்கும்.

தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story