மாவட்ட செய்திகள்

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, வைகை ஆற்றில் வெள்ளம் + "||" + Warning of coastal residents, flooding in Vaigai river

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, வைகை ஆற்றில் வெள்ளம்

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, வைகை ஆற்றில் வெள்ளம்
வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை,

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து இருந்த நிலையில், தற்போது வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரையை வந்தடைந்துள்ளதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்ட படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதற்கிடையே, நேற்று காலையில் கல் பாலத்தை தொடும்படியாக தண்ணீர் சென்ற காட்சிகளை காண முடிந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் மாலையில் கல் பாலத்தை தண்ணீர் மூழ்கடித்துச் சென்றது.

இதையடுத்து கல் பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதுபோல், மதிச்சியம் பகுதியையும், முனிச்சாலை பகுதியையும் இணைக்கும் ஓபுளா படித்துறை தரைப்பாலத்தையும் தண்ணீர் மூழ்கடித்துச் சென்றதால் ஓபுளா படித்துறை பாலத்திலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில் மதுரை நகரில் வைகை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கவும், வாகனங்களை கழுவுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரப்பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.