மாவட்ட செய்திகள்

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது + "||" + Anupishekam takes place tomorrow at the Thirumalapady Vaidyanathaswamy temple

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் நாளை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் தமிழ்நாடு சுற்றுலா தலமான சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான அன்னாபிஷேகம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களை படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத பவுர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்று சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிக பொலிவுடன் தோற்றமளிக்கும். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் வழிபாடு செய்வதே சிறப்பு என்பதாலும் நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதாலும், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.


ஆற்றில் கரைப்பார்கள்

மேலும் அம்பிகைபாகனான சிவபெருமான் அபிஷேகப்பிரியர். அதனால் அன்று இரவு 7 மணி அளவில் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகமும், மகா தீபாராதனையும் காட்டப்படும். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், திரவியப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ? அதை பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன உபநிடதங்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம்கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக்காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்று இக்கோவிலில் வடித்து சற்றே ஆறவைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேல் காய், கனி வகைகளை கொண்டு அலங்கரிப்பார்கள். இந்த வேளையில் யஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்கள் ஓதப்படுகிறது. லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னத்தை எடுத்துச் சென்று நீர் வாழ் உயிர்களுக்கு உணவாக கோவில் குளம் மற்றும் ஆற்றில் கரைப்பார்கள்.

நல்ல அதிர்வுகளும் உடலுக்கு தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் மேல் பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம். இதனால் ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் இந்நாளில் வந்து வழிபடுவது வழக்கம். தற்போது விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2. ஆங்கில புத்தாண்டு பிறப்பு: சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் படி பூஜை
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் படி பூஜை நடந்தது.
3. சாந்தநாதசுவாமி கோவிலில் பஞ்சமூர்த்தி வீதி உலா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டையில் உள்ள சாந்தநாதசுவாமி கோவிலில் நேற்று பஞ்ச மூர்த்தி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. கார்த்திகை கடை ஞாயிறு திருவிழாவையொட்டி வாஞ்சிநாதர் கோவிலில் தீர்த்தவாரி
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
5. அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 4-வது சோமவாரவிழா பக்தர் ஒருவர் படியில் உருண்டு ஏறி நேர்த்திக்கடன்
அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவாரவிழா நடைபெற்றது. இதில் பக்தர் ஒருவர் படிகளில் உருண்டு ஏறி நேர்த்திக் கடன் செலுத்தினார்.