பூதலூர் ஒன்றியத்தில், அனைத்து ஏரிகளும் நிரம்பின - விவசாயிகள் மகிழ்ச்சி
பூதலூர் ஒன்றியத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி,
உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாயில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கால்வாயில் வரும் தண்ணீரை கொண்டு ஏரிகளில் நீர் நிரப்பும் பணிகளில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.
உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய் வழியாக நவலூர்குளம், சுரக்குடிபட்டிஏரி, ஓலைமுத்துகுளம், மருவத்திகுளம், நெப்பிகுளம், வெண்டயம்பட்டிஏரி, வெட்டிகுளம், ஓடைகுளம், காமத்தி ஏரி, காமத்திபுது ஏரி, சாத்தான் ஏரி, சலிப்பிரி ஏரி, வேலாமருதன் ஏரி, சாயக்குடிஏரி, அளகாப்பேட்டை ஏரி, சேராம்பாடி ஏரி ஆகிய ஏரிகள் மற்றும் அதனுடன் இணைந்த ஏரிகளும் நிரம்பி ஒரு போக நெல் சாகுபடி நடைபெறும்.
தண்ணீர் திறக்கப்பட்டதில் இருந்து அவ்வப்போது பெய்து வந்த மழையால் பூதலூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பாசன ஏரிகளும் விரைவாக நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய் வழியாக பாசனம் பெறக்கூடிய பெரிய ஏரியாக வெண்டயம் பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி தற்போது முழுவதும் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
அனைத்து ஏரிகளும் நிரம்பி விட்ட நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் உழவு செய்தல், நாற்று விடுதல் ஆகிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்கினால் நல்ல முறையில் விவசாயம் செய்ய இயலும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story