உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தண்ணீர் லாரி வழங்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு


உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தண்ணீர் லாரி வழங்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 10 Nov 2019 10:30 PM GMT (Updated: 10 Nov 2019 9:15 PM GMT)

உடுமலையில் தீயணைப்பு பணிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் தீயணைப்பு பணிக்கு உதவும் வகையில் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு என்று தனியாக தண்ணீர் லாரி வழங்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உடுமலை, 

உடுமலை நகரில் பொள்ளாச்சி சாலையில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. முன்பு இந்த தீயணைப்பு நிலையத்தில் ஒரு தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 39 பேர் என மொத்தம் 40 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் பல்வேறு வெளியூர்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்பட்டதைத்தொடர்ந்து, உடுமலை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தவர்கள் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் நியமிக்கப்படாமல் உடுமலை தீயணைப்பு நிலையத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் 19 பேர் என மொத்தம் 20 பேர் மட்டுமே உள்ளனர். முன்பு 2 தீயணைப்பு வாகனங்கள், ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை இருந்தன. இப்போது ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே உள்ளது.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 2 தாலுகாக்களுக்கும் சேர்த்து இந்த ஒரு தீயணைப்பு நிலையம்தான் உள்ளது. இந்த தாலுகாக்களில் நூல் மில்கள், தென்னை நார் தொழிற்சாலைகள், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட விளைநிலங்கள், 2 அணைகள், பின்னலாடை நிறுவனங்கள் உள்பட தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளன. முன்பைவிட தற்போது குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன.

கோடைகாலங்களில் புற்கள் காய்ந்து தீவிபத்துகள் ஏற்படுகின்றன. குடியிருப்பு பகுதிகளிலும் தீ விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன. ஆண்டொண்டிற்கு சுமார் 150 தீவிபத்துகள் ஏற்படுகின்றன. தீ விபத்து இடங்களுக்கு தீயணைப்புப்படையினர் தண்ணீருடன் கூடிய தீயணைப்பு வாகனத்தில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது பல நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிலையில் அந்த தீயணைப்பு வாகனம் அங்கிருந்து, தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு சென்று தண்ணீரை நிரப்பிக்கொண்டு வரவேண்டுமென்றால் காலதாமதமாகும்.

அந்த நேரங்களில் பொள்ளாச்சி, பழனி, தாராபுரம் போன்ற இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களை உதவிக்கு அழைக்கின்றனர். அப்போது அந்த நிலையங்களைச்சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் வேறு இடங்களில் தீவிபத்து ஏற்பட்டு அந்த பகுதிக்கு சென்றிருந்தால் உடுமலை பகுதிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படிபட்ட நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் தீயணைப்புபணிகள் தாமதமாகும் நிலையால் தீவிபத்து நடந்துள்ள இடத்தில் பொருட்கள் சேதம் அதிகரிக்கக்கூடும்.

இந்த சூழ்நிலையில் தீயணைப்புத்துறையினர், தனியார் தண்ணீர் லாரிகளை அழைத்து தீயணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு புதிய தண்ணீர் லாரி தேவைப்படுகிறது. அத்துடன் அணைகளில், மீட்பு பணிகளுக்காக தண்ணீரில் செல்வதற்கு ரப்பர் படகு உள்ளது. இந்த ரப்பர் படகிற்கு மோட்டாரும் தேவைப்படுகிறது. உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தேவையான தண்ணீர் லாரி இருந்தால் அவர்களது தீயணைப்புப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெற உதவும் என்பதால் புதிய தண்ணீர் லாரிக்கு அரசு ஏற்பாடுசெய்யவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் மடத்துக்குளம் தாலுகாவில் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. அரசு மருத்துவமனையும் உள்ளது. இந்த தாலுகாவில் அமராவதி ஆறு, கால்வாய், பல தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் மடத்துக்குளத்தில் தனியாக தீயணைப்பு நிலையம் திறக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story