15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை - இன்று பட்டியல் இறுதி செய்யப்படுகிறது


15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை - இன்று பட்டியல் இறுதி செய்யப்படுகிறது
x
தினத்தந்தி 11 Nov 2019 4:45 AM IST (Updated: 11 Nov 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்கள். இன்றும்(திங்கட்கிழமை) ஆலோசித்து வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய உள்ளனர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, கூட்டணி ஆட்சி கவிழ காரணமாக இருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மந்திரிகள் ராமலிங்க ரெட்டி, டி.கே.சிவக்குமார், எஸ்.ஆர்.பட்டீல், எம்.பி.பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், முன்னாள் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், சிவாஜிநகர், மகாலட்சுமி லே-அவுட், பல்லாரி மாவட்டம் விஜயநகர், மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை, பெலகாவி மாவட்டம் அதானி, காகவாட், கோகாக் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ள காங்கிரஸ் கட்சியின் பிரபலங்களும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து எந்த விதமான இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்து, அதற்கான பட்டியலை தயாரித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு அனுப்ப தினேஷ் குண்டுராவ், சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story