தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 11 Nov 2019 10:45 PM GMT (Updated: 11 Nov 2019 3:04 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள திம்மராஜபுரம், விட்டிலாபுரம், புறையூர், முடிவைத்தானேந்தல், மானாடு தண்டுபத்து, பெரியதாழை, வில்லிசேரி, கலப்பைபட்டி, பூசனூர், பி.மீனாட்சிபுரம் ஆகிய 10 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த பணிக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இனசுழற்சி விவரங்கள் http://www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் தகுதியானவர்கள் வருகிற 22–ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை உரிய சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரிலோ, பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது மேற்கண்ட இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதே போன்று தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளன. 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் அருந்ததியர், ஆதிதிராவிடர் பழங்குடியினர் 35 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மேலும் 2 டிரைவர்கள் பணிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள், ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி உள்ளவர்கள் மாவட்ட கலெக்டர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), கோரம்பள்ளம், தூத்துக்குடி–101, தொலைபேசி எண்: 0461–2340679 என்ற முகவரியில் வருகிற 22–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story