கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின் போது பெண் சாவு: 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்


கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின் போது பெண் சாவு: 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2019 10:30 PM GMT (Updated: 11 Nov 2019 9:55 PM GMT)

கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின்போது பெண் இறந்த சம்பவம் தொடர்பாக, உறவினர்கள் 2-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் மகன் செந்தில் (வயது 27). இவர் நேற்று முன்தினம் தனது தாயார் அய்யம்மாளுடன் (55) ஒரு மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டார்.

கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்த செந்திலை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர்.

உடனே அவர் ‘பிரேக்’ போட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த அய்யம்மாள் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து இறந்தார். இதையறிந்த அய்யம்மாளின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அய்யம்மாள் சாவுக்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தான் காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களை கள்ளக்குறிச்சி போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணி, போலீஸ்காரர்கள் சந்தோஷ்குமார், இளையராஜா, செல்வம் ஆகியோரை விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து நேற்றுமுன்தினம் இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

இதற்கிடையில் செந்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாகவும், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை பார்த்ததும் பதற்றத்தில் அவர் ‘பிரேக்’ போட்டதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அய்யம்மாள் காயமடைந்து இறந்து விட்டதாகவும் கள்ளக்குறிச்ச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது பற்றி அறிந்த பா.ம.க.மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சரவணன், கிராம மக்கள் மற்றும் செந்தில், அய்யம்மாள் மகள் வெண்ணிலா, உறவினர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், போலீசார் லத்தியால் தாக்கியதால்தான் அய்யம்மாள் இறந்துள்ளார்.

இது தொடர்பாக செந்திலிடம் புகார் வாங்கி, அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தாமல், வெண்ணிலாவை மிரட்டி அவரிடம் புகார் மனு வாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே அய்யம்மாள் சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரையில் உடலை வாங்க மாட்டோம் என்றனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்ததும் அய்யம்மாளின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் செந்தில், போலீசாரிடம் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், நானும் எனது தாய் அய்யம்மாளும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது போலீசார் எங்கள் வாகனத்தை வழிமறித்தனர். உடனே நான் எனது மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்த முயன்றேன். ஆனால் நான் அங்கிருந்து தப்பிச்செல்வதாக நினைத்த போலீசார், எனது மோட்டார் சைக்கிளை காலால் எட்டி உதைத்ததோடு கையில் வைத்திருந்த லத்தியால் என்னை தாக்க முயன்றனர்.

இதில் சுதாரித்துக்கொண்ட நான் குனிந்து கொண்டபோது மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருந்த எனது தாய் அய்யம்மாளின் தலையில் பலத்த அடிபட்டு அவர் இறந்துவிட்டார். எனவே வாகன சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்டதற்கான ரசீது, செந்திலுக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்டது.

இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் பரிந்துரைபடி பணியின்போது அஜாக்கிரதையாக செயல்பட்ட பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணி உள்பட 5 போலீசாரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து நேற்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Next Story