பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்


பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Nov 2019 4:30 AM IST (Updated: 12 Nov 2019 9:11 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் கோரிக்கைகளை வலி யுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம் சென்றனர்.

பெரம்பலூர்,

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும் சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் உணவூட்டும் செலவினம் தலா ரூ.5 வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணிஇடங்களை போர்க்கால அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கை கவன ஈர்ப்பு ஊர்வலங்கள் நேற்று நடந்தன.

ஊர்வலம்

அதன்படி பெரம்பலூரில் நடைபெற்ற ஊர்வலம் ரோவர் நூற்றாண்டு வளைவில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் (பொறுப்பு) பெரியசாமி தலைமை தாங்கினார். இணை செயலாளர் துரைரங்கம் வரவேற்றார். ஊர்வலத்தை மாநில துணை தலைவர் அமுதா தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் கொளஞ்சி வாசு, பொருளாளர் மணிமேகலை, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லபிள்ளை மற்றும் அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், அரசு பணியாளர்கள் சங்கம், கூட்டுறவு சங்கம், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் வெங்கடேசபுரம், எல்.எல்.சி. வழியாக சென்று பாலக்கரையில் முடிவடைந்தது. அங்கு நடந்த கூட்டத்தில் பலர் கருத்துரை ஆற்றினர். சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் வருகிற 26-ந் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், அடுத்த மாதம் டிசம்பர் 23-ந் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தப்படும என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story