பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தமா? முதல்-மந்திரியின் அரசியல் ஆலோசகர் எஸ்.ஆர்.விஸ்வநாத் பதில்
பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்பட்ட தகவலுக்கு முதல்-மந்திரியின் அரசியல் ஆலோசகர் எஸ்.ஆர்.விஸ்வநாத் பதிலளித்துள்ளார்.
பெங்களூரு,
பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்பட்ட தகவலுக்கு முதல்-மந்திரியின் அரசியல் ஆலோசகர் எஸ்.ஆர்.விஸ்வநாத் பதிலளித்துள்ளார்.
ரகசிய ஒப்பந்தம்
கர்நாடகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் ஆலோசகர் எஸ்.ஆர்.விஸ்வநாத் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிர சுடன் கூட்டு சேர்ந்து ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சி நடத்தியது. இப்போது ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் பா.ஜனதா ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக சித்தராமையா கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. காங்கிரசில் சித்தராமையாவுக்கு மரியாதை இல்லை. அக்கட்சியின் பிற தலைவர்கள் அவருக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
பா.ஜனதா வேட்பாளர்கள்
தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை (இன்று) தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பு வெளியான பிறகு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். ஒசக்கோட்டை தொகுதியை தவிர பிற தொகுதிகளில் எந்த குழப்பமும் இல்லை. யாராக இருந்தாலும், தனது தொகுதியை விட்டு கொடுக்கும்போது வேதனை ஏற்படுவது சகஜம்.
ஒசக்கோட்டை தொகுதி பிரச்சினையை எங்கள் கட்சியின் தலைவர்கள் சரிசெய்வார்கள். போலி ஆவணங்களை உருவாக்கி வீட்டு மனைகளை பதிவு செய்தது தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளேன்.
ஆவணங்கள் இல்லாமலேயே...
கணினியில் உள்ள தொழில்நுட்பத்தை திருத்தி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சொத்துகளின் பதிவும் திருத்தப்பட்டு, மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் சட்டப்படி சொத்துகளை வாங்கி பதிவு செய்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். சில சொத்துகளுக்கு ஆவணங்கள் இல்லாமலேயே பதிவு செய்துள்ளனர். இதற்கு சார்-பதிவாளர்கள் முக்கிய காரணம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு எஸ்.ஆர்.விஸ்வநாத் கூறினார்.
Related Tags :
Next Story