சுற்றுலாத்துறை புறக்கணிப்பதாக புகார்: குட்டி கொடைக்கானலாக மாறுமா சிறுமலை?
மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலம் என்றாலே நம் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை எழில்மிகு காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. இதயத்தை வருடும் இதமான காற்று, முகடுகளை முத்தமிடும் மேக கூட்டம், பறவைகளின் கீச்சிடும் சத்தம், நெஞ்சை பதை பதைக்க செய்யும் விலங்குகள், வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை, பயமுறுத்தும் பள்ளத்தாக்கு என அடுக்கி கொண்டே போகலாம்.
அந்த வகையில் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையும் பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமானதாக திகழ்கிறது. இதனை ‘குட்டி கொடைக்கானல்‘ என்றே அழைக்கின்றனர். இது, அழைப்பில் மட்டுமே உள்ளது. ஆனால் நிஜத்தில், சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் எதுவும் சிறுமலையில் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை கலந்த அதிர்ச்சியே.
சிறந்த சுற்றுலா அம்சங்களுடன் உடைய சிறுமலையை, உண்மையிலேயே குட்டி கொடைக்கானலாக மாற்ற வேண்டும் என்ற மக்களின் எண்ணம் கானல் நீராகவே இருந்து வருகிறது. இதற்காக முயற்சியில் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு ஈடுபடாமல் இருப்பது புரியாத புதிராகவே உள்ளது. இதற்கிடையே சிறுமலையை சுற்றுலாதலமாக்கினால் கொடைக்கானல் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது. இது தான் காரணமாக இருக்குமோ? என்ற கேள்வி துளைக்கிறது. இதற்கிடையே சுற்றுலாத்துறை சிறுமலையை புறக்கணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
எந்த வகையிலும், கொடைக்கானலை காட்டிலும் சிறுமலை சளைத்தது அல்ல என்று சொல்லும் அளவுக்கு இயற்கை அழகு அங்கு கொட்டி கிடக்கிறது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான சிறுமலைக்கு, திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோ மீட்டர் பயணித்தால் சென்றடையலாம். கொடைக்கானலை போலவே, சிறுமலை மலைப்பாதையிலும் கொண்டை ஊசி வளைவுகள் நம்மை வரவேற்கும். கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளை விட சிறுமலை மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் அதிகம்.
மலைகளின் மீது வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையின் அழகை நித்தமும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். இத்தனை சிறப்பு வாய்ந்த சிறுமலைக்கு மற்றொரு வரலாற்று சிறப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, ராமாயணத்தில் ராவணனுடன் நடந்த யுத்தத்தின் போது மயக்கமடைந்த லட்சுமணனை குணமடைய செய்வதற்கு மூலிகை தேவைப்பட்டது. அதனை எடுத்துவர சஞ்சீவி மலைக்கு சென்ற அனுமன், மூலிகையை கண்டறிய முடியாமல் மலையையே தன் கையால் தூக்கிச்சென்ற போது, அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சிறு துண்டே தற்போதுள்ள சிறுமலை என்று கருதப்படுகிறது.
சிறுமலையில் அரிய வகை மூலிகை செடிகள் உள்ளன. இதனால் சிறுமலை முழுவதும் மூலிகை காற்று வீசும். இதனை சுவாசிப்பதற்காகவே திண்டுக்கல்லை சேர்ந்த பலர் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் நத்தம் சாலையில் இருந்து சிறுமலை அடிவாரம் நோக்கி நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அப்போது மூலிகை காற்றை அவர்கள் சுவாசிப்பதால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுதவிர, எலுமிச்சம், வாழை, பலா ஆகிய பழங்கள் இங்கு விளைச்சலாகிறது. குறிப்பாக முக்கனிகளில் 2 கனிகளான வாழை, பலாப்பழங்கள் அதிக அளவில் விளைகின்றன. நாவை சுண்டி இழுக்கும் வகையில் இந்த பழங்கள் ருசியாக இருக்கும். கொடைக்கானல் போல் கடும் குளிர், பனி வீசாமல் இங்கு எப்போதும் இதமான காலநிலையே நிலவுகிறது.
சிறுமலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சிறுமலைக்குள் நாம் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது பாண்டியன் தெப்பக்குளம் ஆகும். இதில் தூர்வாரும் பணி முறையாக மேற்கொள்ளப்படாததால், குளத்தில் முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. கரைகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இந்த குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தினால் தங்களின் குடிநீர் பிரச்சினை தீரும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால் அவர்களின் கூக்குரல் தற்போது வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எட்டவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த குளத்தை தூர்வாரி படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்தால் சிறுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அப்படி சுற்றுலா பயணிகள் சிறுமலைக்கு வரத்தொடங்கினால் கொடைக்கானல் போல் சிறுமலையும் சிறந்த சுற்றுலா தலமாக உருவெடுக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இதுதவிர, அடிப்படை வசதிகளும் சிறுமலை பகுதி மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
தியாகராஜன்:- சிறுமலை அண்ணாநகர், தாழக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தாழக்கடை பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மின்கம்பங்கள் நட்டு வைக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னர் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
இதனால் தற்போது வரை அந்த கிராமம் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதே போல் தென்மலை பகுதியில் பல இடங்களில் இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை. மின்சார வினியோகம் செய்யப்படும் பகுதிகளிலும் மழைக்காலங்களில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரிதும் அவதிப்படுகின்றனர்.
பழையூரில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் தண்ணீரை ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் சேமித்து வைத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்கிறது. ஆனால் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அத்துடன் மழைக்காலங்களில் சிறுமலை மலைப்பாதையில் அவ்வப்போது மண்சரிவு ஏற்படுகிறது. பாறைகளும் உருண்டு சாலையில் விழுகின்றன.
அவற்றை நெடுஞ்சாலைத்துறையினரும் அகற்றுகின்றனர். ஆனால் சில இடங்களில் விழுந்த பாறைகளை அப்புறப்படுத்தாமல் சாலையோரத்திலேயே விட்டுச்செல்கின்றனர். இதனால் இரவில் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ராஜசன்னாசி:- ‘கஜா’ புயலின் போது சிறுமலை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிறுமலைக்கு வந்து ‘கஜா’ புயல் சேதம் குறித்து கணக்கெடுத்து நிவாரணமும் வழங்கினர். ஆனால் நிவாரண தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நிவாரண தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுமலையில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள் தண்ணீர் வசதி இல்லாததால் தற்போது வரை பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே கழிப்பறைகளை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவுன்ராஜ்:- திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகளும் ஏற்படுகிறது. சிறுமலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டிருந்தாலும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புக்கு முழுமையான சிகிச்சை பெற முடியவில்லை. திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
காய்ச்சல் பாதிப்பு காரணமாக மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சிறுமலையில் அடிக்கடி இலவச மருத்துவ முகாம்கள் நடத்தவும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story