கலாசார சீரழிவில் சிக்க வைக்கிறது: ‘செல்போனை கண்டுபிடித்தவர் மீது ஆத்திரம் வருகிறது' - அமைச்சர் பாஸ்கரன் ருசிகர பேச்சு


கலாசார சீரழிவில் சிக்க வைக்கிறது: ‘செல்போனை கண்டுபிடித்தவர் மீது ஆத்திரம் வருகிறது - அமைச்சர் பாஸ்கரன் ருசிகர பேச்சு
x
தினத்தந்தி 12 Nov 2019 10:30 PM GMT (Updated: 12 Nov 2019 7:54 PM GMT)

பலரையும் கலாசார சீரழிவில் சிக்க வைப்பதால் செல்போனை கண்டு பிடித்தவர் மீது ஆத்திரம் வருகிறது என்று அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் சிறப்பு வாய்ந்த திட்டங்களில் ஒன்றாக மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி அதை செயல்படுத்தினார். அவருக்கு பின்பு இந்த திட்டத்தை தற்போது முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

மடிக்கணினி என்பது மாணவர்களுக்கு அறிவியல் சம்பந்தமான செய்திகளையும், பாடம் மற்றும் உலக விஷயங்களை மட்டும் தெரிந்து கொள்ள உதவும் சாதனமாக இருக்க வேண்டும். இந்த தேவைகளுக்கு மட்டும் தான் மாணவர்கள் இதை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்களது கவனத்தை சிதற விடாமல் கல்வியில் மட்டும் செலுத்த வேண்டும்.

தற்போதைய மாணவர்கள் எங்கு பார்த்தாலும் கையில் செல்போன் வைத்துக்கொண்டு அதனுடன் நேரத்தை செலவு செய்கின்றனர். இன்னும் சிலர் அந்த செல்போனுடன் ‘புளு டூத்’ உபகரணத்தை காதில் மாட்டிக் கொண்டு தனியாக பேசியபடி சிரித்துக்கொண்டே செல்கின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும் போது செல்போனை கண்டுபிடித்தவர் மீது ஆத்திரம் வருகிறது. செல்போன் என்பது நமக்கு மற்றவர்களிடம் தகவல்களை பரிமாற்றுவதற்கான சாதனம். ஆனால் அந்த சாதனத்தால் கலாசார சீரழிவுகளில் சிக்கி மாணவ-மாணவிகள் உள்பட பலரும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே செல்போனை தங்களது தேவைக்காக மட்டும் பயன்படுத்தி பிற தவறான விஷயங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், சிவகங்கை முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பழனிசாமி, அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிவண்ணன், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சக சங்க தலைவர் சசிகுமார், கூட்டுறவு விற்பனை பண்டக சாலை துணை தலைவர் மெய்யப்பன், காரைக்குடி தாசில்தார் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story