விபத்தில் இறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குட்டி குரங்கு


விபத்தில் இறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குட்டி குரங்கு
x
தினத்தந்தி 13 Nov 2019 4:00 AM IST (Updated: 13 Nov 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் வைத்திருக்கும் பழங்கள் மற்றும் தேங்காய், பொரிகடலை உள்ளிட்ட உணவுபொருட்களை வீசி விட்டு செல்வார்கள். அவற்றை குரங்குகள் தின்பது வழக்கம்.

ஈரோடு, 

தின்பண்டங்களை தின்று ருசி கண்ட குரங்குகள் சென்னிமலை நகரத்துக்கு படையெடுக்க தொடங்கின. கடைகளுக்கு புகுந்து அங்கு தொங்க விடப்பட்டுள்ள பழங்களை பறித்து தின்கின்றன. வாழைப்பழத்தார்களை பறித்தும் பொருட்களை தூக்கியும் வீசி வருகின்றன. குறிப்பாக பஸ் நிலையங்களில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் விரட்ட வருபவர்களை துரத்தி சென்று கடிக்கிறது. மேலும் வீடுகளில் புகுந்து தொல்லை கொடுக்கின்றன. மொட்டை மாடிகளில் உள்ள கொடிகளில் காயப்போட்டிருக்கும் துணிகளை எடுத்து வீசுகிறது. வீடுகள் முன்பு வைக்கப்பட்ட பொருட்களையும் விட்டுவைப்பதில்லை. ரோடுகளிலும் குரங்குகள் கும்பல் கும்பலாக அலைந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே தாய் குரங்கு ஒன்று குட்டி குரங்குடன் ரோட்டை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு வாகனம் தாய் குரங்கின் மீது மோதியது. இதில் குரங்கு தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடியது.

அதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அடிபட்ட குரங்குக்கு தண்ணீர் கொடுத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் குரங்கு பரிதாபமாக இறந்தது. தாய் குரங்கு இறந்தது தெரிந்ததும் குட்டி குரங்கு கண்ணீர் விட்டு அழுதது. மேலும் தாய் குரங்கை கட்டிபிடித்தபடியே நகராமல் அங்கேயே இருந்தது. குட்டி குரங்கின் இந்த பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை வனத்துறையினர், குட்டி குரங்கை அப்புறப்படுத்திவிட்டு தாய் குரங்கின் உடலை மீட்டனர். பின்னர் அதை வனப்பகுதிக்கு கொண்டு சென்று குழி தோண்டி புதைத்தனர். குட்டி குரங்கு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

Next Story