சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் மேல்முறையீடு செய்யும் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் பேட்டி


சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் மேல்முறையீடு செய்யும் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் பேட்டி
x
தினத்தந்தி 14 Nov 2019 3:30 AM IST (Updated: 13 Nov 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் மேல்முறையீடு செய்யும் என்று முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் கூறினார்.

கோலார் தங்கவயல்,

17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் மேல்முறையீடு செய்யும் என்று முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் கூறினார்.

இடைத்தேர்தலில் போட்டி

கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தன. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது.

இதற்கிடையே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த 17 பேரையும் தகுதி நீக்கம் செய்தும், அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். அதை எதிர்த்து அவர்கள் 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றும், ஆனால் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் கூறி தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர்கள் 17 பேரும் பா.ஜனதாவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

ரமேஷ் குமார் பேட்டி

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து நேற்று கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரில் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரசின் வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன். இருப்பினும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதித்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலிக்கவில்லை. இந்த விஷயத்தில் எனக்கு எப்படி போராடுவது என்று தெரியும். இது ஒரு தார்மீக மோதல். நாட்டின் முழு அதிகாரத்திற்கு எதிராகவும் நான் போர் தொடுக்க ஆயத்தமாகி உள்ளேன். எடியூரப்பா தற்போது அரசியல் கவலையில் இருக்கிறார்.

அரசியல் சூழ்ச்சிகள்...

இடைத்தேர்தலில் மக்கள் கர்நாடக அரசியலில் நடந்த சூழ்ச்சிகளை மனதில் வைத்துக்கொண்டு ஓட்டுப்போட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அறநெறி பற்றி பேசுகிறார். ஆனால் அவர் அவ்வாறாக நடந்து கொள்வதாக எனக்கு தெரியவில்லை. இடைத்தேர்தல் நிகழ்வுகளை சுப்ரீம் கோர்ட்டும் கவனிக்க வேண்டும்.

ஊழல் புகார்களில் சிக்குபவர்களை சிறைக்கு அனுப்புங்கள். ஆனால் அந்த நடவடிக்கை பாரபட்சமாக காங்கிரசாரை குறிவைத்து மட்டும் நடக்கக்கூடாது. நாட்டின் செல்வங்கள் ஒருசிலரின் பாக்கெட்டுகளுக்கு மட்டுமே சென்று சேர்கின்றன. தேர்தல் கூட தற்போது சரியான முறையில் நடப்பதாக எனக்கு தெரியவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மேல்முறையீடு செய்யும். இதுபற்றி நாளை(அதாவது இன்று) காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

அர்த்தமில்லை

தகுதி நீக்கம் செய்யப்பட்டதே அவர்கள் 17 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனைதான். அவர்கள் செய்த தவறுக்கு நான் வழங்கிய தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. ஆனால் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட தண்டனைக்கு அர்த்தமில்லை.

இவ்வாறு ரமேஷ் குமார் கூறினார்.

Next Story