விருதுநகரில், மூடப்பட்ட மத்திய அரசின் மருந்தகங்கள் திறக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு கோரிக்கை


விருதுநகரில், மூடப்பட்ட மத்திய அரசின் மருந்தகங்கள் திறக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு கோரிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2019 3:30 AM IST (Updated: 13 Nov 2019 11:34 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் பிரதமரின் ஜன் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த 2 மருந்தகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்ந்து செயல்பட விருதுநகர் தொகுதி எம்.பி.மாணிக்கம் தாகூர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமரின் ஜன் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மருந்தகங்களை எல்லா பகுதிகளிலும் மத்திய அரசு திறந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இந்த மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இந்த மருந்தகங்களில் மற்ற மருந்தகங்களில் கிடைப்பதைவிட அத்தியாவசிய மருந்துகள் மிக குறைந்த விலையில் கிடைத்து வந்தன.

விருதுநகரில் 2 இடங்களில் இந்த மருந்தகங்கள் திறக்கப்பட்டன. புறநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்திலும், விருதுநகர் தெப்பம் அருகில் ஒதுக்குப்புறமான இடத்திலும் திறக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு இந்த மருந்தகங்கள் செயல்படுகிறதா இல்லையா என்று தெரிய வில்லை. இதனால் இந்த மருந்தகங்கள் முழு பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும் தனியார் மருந்து நிறுவனங்களும் மத்திய அரசின் இந்த மருந்தகங்கள் செயல்படுவதை விரும்பாத போதிலும் இந்த மருந்தகங்களுக்கு பெரிய ஊக்கம் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த மருந்தகங்கள் முறையாக செயல்பட வில்லை எனக்கூறி இதனை மூடி விட்டனர். மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் இந்த மருந்தகங்கள் நன்றாக செயல்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தின் தலைநகரான விருதுநகரில் இந்த மருந்தகங்கள் மூடப்பட்டு விட்டது.

எனவே இந்த மாவட்டத்தின் எம்.பி. மாணிக்கம் தாகூர் இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்திடம் முறையிட்டு பிரதமரின் இந்த மருந்தகங்கள் உடனடியாக திறக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மருந்தகங்கள் பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் திறக்கப்பட்டு அனைத்து வகை மருந்துகளும் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னேற துடிக்கும் மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இம்மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் குமாரும் உரிய நடவடிக்கை எடுத்து இந்த மருந்தகங்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

Next Story