துடியலூர் அருகே இரவு நேரத்தில், குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அச்சம்


துடியலூர் அருகே இரவு நேரத்தில், குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 13 Nov 2019 10:15 PM GMT (Updated: 13 Nov 2019 7:01 PM GMT)

துடியலூர் அருகே, குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் சுற்றித்திரிந்ததால், பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

துடியலூர்,

கோவையை அடுத்த துடியலூர் அருகில் உள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு தெருநாய்கள் குரைத்து கொண்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர்.

அப்போது அங்கு 6 யானைகள் 2 குட்டியுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தன. மேலும் அந்த யானைகள் வீட்டின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தாக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பயந்து போய் வீட்டுக்குள் முடங்கி கொண்டனர். மேலும் வீட்டின் முன் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அணைத்துவிட்டு அமைதியாக இருந்தனர்.

நீண்ட நேரமாகியும் அந்த யானைகள் அங்கேயே சுற்றியதால், இதுகுறித்து அப்பகுதி மக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் யானைகள் காட்டுக்குள் சென்றன.

இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், காட்டு யானைகள் மலைப்பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி வருகிறது. இவை வரும் வழியில் உள்ள வாழை மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்துகின்றன.

மேலும் சில சமயங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே வனப்பகுதியையொட்டி அகழி அமைத்து யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story