பாட்டவயல் பகுதியில் புலி நடமாட்டம் - பொதுமக்கள் பீதி


பாட்டவயல் பகுதியில் புலி நடமாட்டம் - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 14 Nov 2019 4:15 AM IST (Updated: 14 Nov 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

பாட்டவயல் பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பந்தலூர்,

தமிழக- கேரள எல்லையான பாட்டவயல் பகுதியில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளாவின் முத்தங்கா சரணாலயமும் உள்ளது. இந்த நிலையில் சுல்தான்பத்தேரியில் இருந்து பாட்டவயல் வழியாக கூடலூருக்கு சாலை செல்கிறது. ஊட்டி, கூடலூர், கோவை உள்ளிட்ட பகுதிக்கு சுல்தான்பத்தேரி, கல்பட்டா, கோழிக்கோட்டில் இருந்து தினமும் பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர இரவு பகலாக சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக திகழ்கிறது.

இந்தநிலையில் அடர்ந்த வனங்களின் கரையோரம் பாட்டவயல் பகுதி உள்ளதால் காட்டு யானைகள், புலிகள் நடமாட்டமும் அதிகம் உள்ளது. பெரும்பாலும் இரவில் காட்டு யானைகள் சாலையில் வந்து நின்று வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வரும். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாட்டவயல்- கேரள சாலையில் புலி நடமாட்டம் காணப்பட்டது. சில சமயங்களில் நீலகிரி போலீஸ் சோதனைச்சாவடி பகுதியில் புலி தென்படுகிறது.

இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி போலீசாரும் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காட்டு யானைகள் பாட்டவயல் பஜாரில் இரவில் வந்து முகாமிடுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி போலீசார் சோதனைச்சாவடியில் இருந்து வெளியேறி ஓடும் நிலையை காண முடிகிறது. தற்போது புலி நடமாட்டம் உள்ளது. எந்த நேரத்திலும் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே வனத்துறையினர் புலியை விரட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்துக்குள் கொண்டு விட வேண்டும்’ என்றனர். இதனிடையே புலி நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவில் பாதுகாப்பாக செல்ல வேண்டும். மேலும் மோட்டார் சைக்கிள்களில் இரவு நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story