சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: காதலன் மூலம் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்


சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: காதலன் மூலம் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்
x
தினத்தந்தி 14 Nov 2019 4:15 AM IST (Updated: 14 Nov 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சினிமா பாணியில் காதலன் மூலம் இளம்பெண் தனது திருமணத்தை நிறுத்தினார்.

சென்னை, 

சென்னையில் சினிமா பாணியில் காதலன் மூலம் இளம்பெண் தனது திருமணத்தை நிறுத்தினார். இதனால் உறவுக்கார பெண்ணை மணமகன் மணந்தார்.

வாட்ஸ்-அப்பில் புகைப்படங்கள்

சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அயனாவரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அயனாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. 10-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்தநிலையில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடைய ‘வாட்ஸ்-அப்’ எண்ணிற்கு மணப்பெண் வேறு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த படத்தை பார்த்து மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருமணத்தை நிறுத்தினர். திடீரென்று திருமணம் நின்று போனதால் மணமகள் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

காதலி போட்ட திட்டம்

மணமகன் ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு படங்களை அனுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.ஜி.ஆர். மகளிர் போலீஸ் நிலையத்தில் மணப்பெண்ணின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் வாட்ஸ்-அப்பில் படங்களை அனுப்பியது நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் என்பது தெரிய வந்தது.

அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவரும், மணப்பெண்ணும் காதலித்து வந்தது தெரிய வந்தது. இவர்களது காதலை பெண்ணின் பெற்றோர் ஏற்காமல் அவரை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க அவசர, அவசரமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் காதலித்த நபரை ஏமாற்றிவிட்டு வேறொருவரை திருமணம் செய்துக் கொள்ள அந்த பெண் விரும்பவில்லை. இதனால் எப்படியாவது திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்திருக்கிறார்.

இந்தநிலையில் காதலனுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை மணமகனுக்கு அனுப்பினால் திருமணம் நின்றுவிடும் என்று அந்த பெண் திட்டமிட்டு இருக்கிறார்.

உறவுக்கார பெண்ணுடன்...

எனவே காதலி சொன்ன யோசனையின்படியே மணமகன் செல்போன் எண்ணிற்கு படங்களை அனுப்பியதாக பிடிபட்ட இளைஞரும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் அந்த பெண்ணின் தந்தை வேறு வழியின்றி கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் மணமகன் வீட்டார் அவருக்கு உறவுக்கார பெண்ணை அதே மேடையில் திருமணம் செய்து வைத்தனர். சென்னையில் சினிமா பாணியில் இந்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Next Story