கிடப்பில் போடப்பட்ட பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் - விரைவில் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை
கிடப்பில் போடப்பட்ட பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டிட பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையுடன் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டுமென, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவிடம் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ஆ.ராசாவின் பரிந்துரையின் பேரில், அப்போதைய தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு கடந்த 3.2.2009 அன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அரசு ஆணை வழங்கியது.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் குன்னம் தாலுகா ஒதியத்தில் அரசு மருத்துவமனையுடன் கூடிய மருத்துவ கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், அதற்கு தேவையான இடத்தை, ஆ.ராசாவின் பெற்றோர் பெயரில் உள்ள ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை சார்பில், 30 ஏக்கர் 28 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அப்போதைய சுகாதார செயலாளர், மந்திரிகள், அமைச்சர்கள் மருத்துவ கல்லூரி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், தமிழக அரசு சார்பில் மண் பரிசோதனை மற்றும் அப்பகுதியில் உள்ள நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி அன்று அப்போதைய தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து கடந்த 23.7.10-ல் நிர்வாக அனுமதியும், 30.12.10-ல் தொழில் நுட்ப அனுமதியும் வழங்கி, ரூ.82 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கல்லூரிக்கான கட்டிடப் பணிகள் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
பின்னர் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் தொடங்க தமிழக அரசால் ஒப்பந்தம் விடப்பட்டு, 2010-ல் மார்ச் மாத இறுதியில் முதல் கட்டமாக அஸ்திவாரம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. பின்னர், தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்றதையொட்டி, தொடங்கப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
மேலும் பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பதவியிடமும் உருவாக்கப்பட்டு, அது இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது. டீனுக்கான அலுவலகம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் மகளிர் திட்ட அலுவலகம் அருகே உள்ளது. தற்போது டீனாக வசந்தி என்பவர் உள்ளார். அவரும் அந்த அலுவலகத்திற்கு வருவதில்லை என்பதால், டீன் அறை பூட்டப்பட்டு காணப்படுகிறது. மேலும் டீன் அறையின் கதவில் பெயர் மாற்றப்படாமல் பழைய டீனின் பெயர் சிவசிதம்பரம் என உள்ளது. எனவே கிடப்பில் போட்ட பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டும் பணியை தமிழக அரசு விரைவில் தொடங்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story