தூத்துக்குடியில் 130 ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் நடவடிக்கை


தூத்துக்குடியில் 130 ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2019 3:30 AM IST (Updated: 14 Nov 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 130 ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் 130 ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையாளர் ஜெயசீலன் எச்சரித்து உள்ளார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாநகரம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது.

நேற்று தெற்கு காட்டன் ரோடு, ஜெய்லானி தெரு, தெற்கு புதுத் தெரு, பார்டர் பஜார், தபால் தந்தி அலுவலக ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மாநகர நல அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதில் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டுமானங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. நேற்று மொத்தம் 130 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.

மீண்டும் கடைகள்...

மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையாளர் ஜெயசீலன் அறிவித்து உள்ளார்.

Next Story