காஞ்சீபுரத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கலெக்டர் பொன்னையா, காந்தி சாலையில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில் இந்த பணிகளை பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.
செல்போன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பொதுசேவை மைய அமைப்பு மூலமாக கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வேளாண்மை தவிர்த்து பல்வேறு உற்பத்தி, வினியோகம், சேவை நோக்குடன் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்த தகவல் சேகரிப்பே பொருளாதார கணக்கெடுப்பாகும். இந்த கணக்கெடுப்பில் குடும்ப தலைவரின் பெயர், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, சமூக பிரிவு, செல்போன் எண், தொழில் விவரங்கள், நிறுவனங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.
இந்த பணிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,300 களப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சேகரிக்கப்படும் விவரங்கள் மத்திய அரசின் பொருளாதார திட்டமிடலுக்கு பயன்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில் கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் ஸ்மிருதி ரஞ்சன் பிரதான், முதுநிலை புள்ளியியல் அலுவலர்கள் எஸ்.சண்முகவேல், குமாரசாமி, மாவட்ட பொதுச் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் பரமசிவம், காஞ்சீபுரம் தாசில்தார் சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story