வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடுகள் வழங்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடுகள் வழங்க வேண்டும் என கலெக்டர் ஷில்பாவிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை,
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடுகள் வழங்க வேண்டும் என கலெக்டர் ஷில்பாவிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கலெக்டரிடம் மனு
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த சிவந்திபுரம் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டர் ஷில்பாவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
நாங்கள் சிவந்திபுரம் ஊராட்சியை சேர்ந்த சிவந்திபுரம், ஆறுமுகப்பட்டி, புலவன்பட்டி, கஸ்பா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் சிவந்திபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மனுக்கள் கொடுத்தோம்.
இலவச ஆடுகள்
கடந்த 9-ந் தேதி இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். தகுதியான நபர்கள் என தகுதியற்ற நபர்களுக்கு டோக்கன் வாங்கப்பட்டன. இதுகுறித்து கடந்த 11-ந் தேதி சிவந்திபுரம் தனி அலுவலரிடம் முறையிட்டோம். அதற்கு அவர், பொதுமக்களிடம் இருந்து இந்த திட்டத்துக்காக பெறப்பட்ட மனுக்களை அம்பை கால்நடை மருத்துவரிடம் கொடுப்பது மட்டுமே எங்கள் வேலை. மற்றபடி அந்த மனுக்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார்.
அம்பை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டோம். அதற்கு அவர் கால்நடை மருத்துவர் உள்பட 6 பேர் கொண்ட குழு இந்த பட்டியலை தயார் செய்ததாக கூறினார். அவரை பார்க்க சென்றோம். எங்களால் பார்க்க முடியவில்லை.
இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பட்டியலை ரத்து செய்து விட்டு, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள எங்களுக்கு இலவச ஆடுகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story