கணவனை கத்தியால் குத்தி பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி - 2 பேருக்கு வலைவீச்சு


கணவனை கத்தியால் குத்தி பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி - 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Nov 2019 4:00 AM IST (Updated: 14 Nov 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி அருகே கணவனை கத்தியால் குத்தி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழைய ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை(வயது33). இவருடைய மனைவி காயத்திரி. சம்பவத்தன்று மாலை செல்லத்துரையும் அவரது மனைவி காயத்திரியும் திருச்சினம்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மாலை 4.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்தது. இதனால் செல்லத்துரை மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வர அருகே அவர் மனைவி காயத்திரி நடந்து வந்தார். பூண்டி மாதா கோவில் வளைவு அருகே இவர்கள் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென செல்லத்துரையை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி காயத்திரி அணிந்திருந்த நகைகளை கழற்றி தருமாறு கேட்டனர். இதற்கு காயத்திரி மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் ஆத்திரமடைந்து செல்லத் துரையை கத்தியால் குத்தினர். இதில் செல்லத்துரையின் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அருகே உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மக்களை கண்டதும் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். கத்திக்குத்தில் காயமடைந்த செல்லத்துரைக்கு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

Next Story