நாடக கலைஞர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பேன் சபாநாயகர் சிவக்கொழுந்து உறுதி
புதுவையில் நாடக கலைஞர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க முதல்-அமைச்சரிடம் கூறி நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் நாடக கலைஞர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க முதல்-அமைச்சரிடம் கூறி நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் உறுதி அளித்துள்ளார்.
நினைவு தினம்
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கருவடிக்குப்பம் இடுகாட்டில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு சங்கரதாஸ்சுவாமிகள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உதவித்தொகை
நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்திற்காகவே வாழ்ந்து மறைந்தவர். பாரதியார், அரவிந்தர் உலவிய மண்ணில் சங்கரதாஸ் சுவாமிகள் சமாதி இருப்பது நமக்கு பெருமை. இது மயானம் போல அல்லாமல் பூங்கா போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடு அடிமைப்பட்டு கிடந்த போது மக்களிடையே சுதந்திர வேட்கையை உருவாக்க காரணமாக இருந்தது நாடகம். நாடக கலைஞர்களுக்கு நேரு சிலை அருகில் ஒரு அரங்கம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடக கலைஞர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை போதுமானதாக இல்லை. அதனை உயர்த்தி வழங்க முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். கலைஞர்களுக்கு புதுவை அரசு என்றும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், கலை பண்பாட்டு துறை இயக்குனர் கணேசன், திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் ஐசரி கணேஷ், விக்னேஷ், குட்டி பத்மினி, கணேஷ், உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம்
புதுவை மாநில கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் நேற்று காலை மகாத்மா காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் முன்பு ஒன்று கூடினர். அங்கிருந்து கருவடிக்குப்பம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்திற்கு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை. சிவக்குமார், பொதுச்செயலாளர் பாலகங்காதரன் தலைமை தாங்கினர். செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை நாடக கலை சங்க தலைவர் புதுவைதாசன் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் புதுவை, காரைக்கால் பகுதியை சேர்ந்த நாடக கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் திரைப்பட தொழிலாளர் சம்மேளத்தினர் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட கலைஞர்கள் தமிழ்வாத்திய கருவிகளை இசைத்தபடியும், நடனம் ஆடியபடியும் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் கருவடிக்குப்பத்தில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் முடிவடைந்தது. அங்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதே போல் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த முன்னணி கலைஞர்கள் பலர் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ஐசரி கணேஷ் பேட்டி
சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது சிறுவயது முதலே நாடகத்தின் சிரமங்களை அறிந்தவன் நான். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2 அணிகள் போட்டியிட்டன. அதில் ஒன்று தான் எங்களுடைய சங்கரதாஸ் அணி.
நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் எதுவும் இ்ல்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story