ராயக்கோட்டை அருகே, மினிவேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்
ராயக்கோட்டை அருகே மினிவேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராயக்கோட்டை,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தண்டுகாரனஅள்ளியை சேர்ந்தவர் சொக்கநாதன். மினிவேன் டிரைவர். இவர் தனது மினிவேனில் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ராயக்கோட்டை, பழையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஓசூரில் வேலைக்கு செல்வதற்காக காத்து நின்ற தொழிலாளர்கள் சிலரை சொக்கநாதன் தனது மினிவேனில் ஏற்றி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
ராயக்கோட்டை அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் தாறுமாறாக ஓடி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சொக்கநாதன் உள்பட மினிவேனில் வந்த 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் விபத்துக்குள்ளான மினிவேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story