ரோஷன் பெய்க் தவிர தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும் பா.ஜனதாவில் சேர்ந்தனர்


ரோஷன் பெய்க் தவிர தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும் பா.ஜனதாவில் சேர்ந்தனர்
x
தினத்தந்தி 15 Nov 2019 4:30 AM IST (Updated: 14 Nov 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

ரோஷன் பெய்க் தவிர தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் முதல்-மந்திரி எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

பெங்களூரு, 

ரோஷன் பெய்க் தவிர தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் முதல்-மந்திரி எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

பா.ஜனதாவில் சேர்ந்தனர்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 பேர் எதிராக செயல்பட்டதை அடுத்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தகுதி நீக்கம் செல்லும் என்றும், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட தடை இல்லை என்றும் கூறியது.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பி.சி.பட்டீல் (இரேகெரூர்), எஸ்.டி.சோமசேகர் (யஷ்வந்தபுரம்), பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), கோபாலய்யா (மகாலட்சுமி லே-அவுட்), முனிரத்னா (ராஜராஜேஸ்வரிநகர்), ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக்), எச்.விஸ்வநாத் (உன்சூர்), மகேஷ் குமடள்ளி (அதானி), சிவராம் ஹெப்பார் (எல்லாப்பூர்), பிரதாப்கவுடா பட்டீல் (மஸ்கி), நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை), ஆனந்த்சிங் (விஜயநகர்), ஸ்ரீமந்த் பட்டீல் (காக்வாட்), ஆர்.சங்கர் (ராணிபென்னூர்), சுதாகர் (சிக்பள்ளாப்பூர்), எம்.டி.பி.நாகராஜ் (ஒசக்கோட்டை) ஆகிய 16 பேர் நேற்று, பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர். அவர்களுக்கு பா.ஜனதா தலைவர்கள் கட்சி கொடி கொடுத்து இணைத்து கொண்டனர்.

தகுதி நீக்க எம்.எல்.ஏ.வான எம்.டி.பி.நாகராஜ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால் பா.ஜனதாவில் சேர்ந்து உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசுகையில் கூறியதாவது:-

பாழாக்க மாட்டோம்

17 எம்.எல்.ஏ.க்கள் பதவியை தியாகம் செய்ததால், நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். மந்திரியாக இருந்த சிலரும் ராஜினாமா செய்தனர். நாங்கள் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை வாக்கு தவறாமல் நிறைவேற்றுவோம். உங்களின் அரசியல் எதிர்காலத்தை பாழாக்க மாட்டோம்.

இடைத்தேர்தலில் உங்களின் வெற்றியை உறுதி செய்வது எங்களின் வேலை. கட்சி நிர்வாகிகள் சிறிய கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். 15 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இன்று (அதாவது நேற்று) கட்சியில் சேர்ந்த அனைவரையும் வாழ்த்துகிறேன். அவர்கள் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ. ஆகி மந்திரி பதவியையும் ஏற்பார்கள்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

ராஜினாமா செய்தோம்

பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் பேசும்போது, “இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது“ என்றார்.

தகுதி நீக்க எம்.எல்.ஏ.வான எச்.விஸ்வநாத் பேசும்போது, “நாங்கள் அதிகாரத்திற்காக பதவியை ராஜினாமா செய்யவில்லை. மோசமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ராஜினாமா செய்தோம். நாங்கள் ராஜினாமா செய்தது, கட்சி தாவல் இல்லை. வளர்ச்சிக்கு ஆதரவான நிலையை நாங்கள் எடுத்தோம்“ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட மந்திரிகள் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் பா.ஜனதாவில் சேர முடிவு செய்திருந்தனர். ஆனால் சிவாஜிநகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க்கின் பெயர் கடைசி நேரத்தில் பா.ஜனதா நீக்கியது.

டிக்கெட் வழங்கவில்லை

ஒரு தனியார் நகைக்கடை நிதி நிறுவனம், மக்களிடம் பணம் வசூலித்து செய்த மோசடியில் ரோஷன் பெய்க் மீதும் புகார் எழுந்துள்ளது. அதனால் அவரை கட்சியில் சேர்க்க பா.ஜனதா மேலிடம் தடை விதித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரோஷன் பெய்க் பா.ஜனதாவில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர் மீது களங்கம் இருப்பதால், இடைத்தேர்தலில் போட்டியிட அவருக்கு டிக்கெட் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story